ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயில் கல்வெட்டு உடைப்பால் பதற்றம்: மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலின் கல்வெட்டை உடைத்து சேதப்படுத்திய 4 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலின் கல்வெட்டை உடைத்து சேதப்படுத்திய 4 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமம் உள்ளது. இங்கு ஒரு தரப்பினருக்கும் பிற சமுதாயத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இங்கே ஊராட்சி மன்றக் கட்டடம் கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, பிற சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரிடம், உங்கள் சமுதாயத்தில் உள்ள யாரேனும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், ஊராட்சி மன்ற கட்டடம் அந்த மக்கள் விரும்பும் பகுதியில் கட்ட அனுமதிக்கப்படும் என்று கூறியதாக, அந்த மாணவர் கடிதம் எழுதிவைத்து, கடந்த மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் காடனேரி, மேலத் தெருவைச் சேர்ந்த சுந்தர நாயக்கர் மகன் காசி நாயக்கர் (43) மேலத்தெரு ஊர் நாட்டாமையாக உள்ளார்.
காடனேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் குமரேசன் (எ) கோபி (19) கொத்தனார் வேலை செய்து வருகிறார். தர்மர் மகன் கலசலிங்கம் (18) டிராக்டர் டிரைவராக உள்ளார். சீலநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருபவர்கள் கண்ணன் மகன் அருண்குமார் (16), சந்திரன் மகன் முத்துச்செல்வம் (16). தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவர்கள் மணிகண்டன் மகன் தினேஷ்குமார் (18), ஜெயப்பிரகாஷ் மகன் முத்துக்குமார் (16).
இவர்கள் 6 பேரும் இங்குள்ள சுந்தர நாச்சியாரம்மன் கோயிலின் உள்ளே இம்மாதம் 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அத்துமீறி நுழைந்துள்ளார்கள். தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த அழகர்சாமி நாயக்கர் பெயர் உள்ள கல்வெட்டை அடித்து உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாமல் போகவே திரும்பிய அவர்கள், மீண்டும் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடப்பாறையுடன் கோயிலினுள் நுழைந்து மூன்று கல்வெட்டுகளை சேதப்படுத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு கோயிலுக்கு மேலத்தெரு ஊர் நாட்டாமை சு.காசிநாயக்கர், லட்சுமணக் கோனார் மகன் ஜெயராமன், ராமசாமித் தேவர் மகன் பச்சையாண்டி, முத்தையா நாடார் மகன் உள்ளிட்ட சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு கல்வெட்டுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காசிநாயக்கர் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து குமரேசன் (எ) கோபி, கலசலிங்கம், அருண்குமார், முத்துச்செல்வம், தினேஷ்குமார், முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து டிராக்டர் டிரைவர் தர்மர் மகன் கலசலிங்கம் என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனு விவரம்:
கலசலிங்கம், அருண்குமார், தங்க முனியாண்டி மற்றும் சிலர் சுந்தர நாச்சியாரம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஆடிட்டர் ராஜூ, சு.காசி, கிளார்க் சின்னமாரிமுத்து, து.பொம்மு, வீ.கிருஷ்ணசாமி மற்றும் சிலரிடம் சாமி கும்பிட கோயிலை திறந்துவிடக் கூறினார்களாம். ஆனால் அவர்கள் சாதி பெயர் சொல்லி திட்டினார்களாம். இதனை உடனிருந்த குமரேசன் தட்டிக் கேட்ட போது அவரை கீழே தள்ளிவிட்டு, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்களாம். இதில் குமரேசன் காயம் அடைந்தாராம். இப் புகாரின் பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தொடர்ந்து இப் பகுதியில் இரு வேறு சமுதாயத்தினருக்கு இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் ஆகியோர் தலைமையில் இப் பகுதியில் போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...