சிதம்பரத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காட்டுமன்னார்கோயில் அருகே குமராட்சியில் துண்டு பிரசுரம் வழங்குகையில் 80 வயது விவசாயி தண்ணீரின்றியும், மின்சாரம் இன்றியும் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பாதித்து நிலங்கள் சுடுகாடாக மாறிவிட்டது. கருணாநிதி ஆட்சியில் 1 ரூபாய்க்கு 1 கிலோ நல்ல அரிசி கிடைத்தது. தற்போது வழங்கப்படும் இலவச அரிசி மாட்டுத்தீவனத்திற்குதான் பயன்படுகிறது என்றார். அதுபோன்று மளிகை கடைக்காரர் தெரிவிக்கையில் கருணாநிதி ஆட்சியில் ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் கட்டினேன். தற்போது மின்சாரமே இல்லாதபோது ரூ.2500 மின்கட்டணம் கட்டுகிறேன் எனக்கூறினார். தற்போது விவசாயத்திற்கு தண்ணீர் கிடையாது. விவசாயத்திற்கு தடையின்றி 12 மணி நேர மும்முணை மின்சாரம் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதனை நம்பி விரைவிட்ட விவசாயிகள் நீரின்றி அவதிப்படுகின்றனர். வெற்றி பெற்றால் தடையில்லா மின்சாரம் தருவோம் என கூறிய ஜெயலலிதா, தற்போது தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். கரண்ட் வரும் ஆனால் வராது என்ற வடிவேலுவின் பாணியில் தற்போது மக்கள் பேசிக்கொள்கின்றனர். கருணாநிதி ஆட்சியில் பில்லூர், மேட்டூர், வடசென்னை, தூத்துக்குடி பகுதிகளில் புதிய மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு முன்பு இருந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகள் எந்த புதிய மின்உற்பத்தி திட்டம் தொடங்கப்படாதால் இன்று தமிழகத்தில் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் யார் என்பதே பொதுமக்களுக்கு தெரியவில்லை. திமுக ஆட்சியில் நிரந்தரமாக அமைச்சர்களை நியமித்து தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படும் வகையில் தலைவர் கருணாநிதி முழுசுதந்திரம் அளித்ததால் அமைச்சர்கள் போட்டி, போட்டு பணியாற்றினார்கள். அதிமுக ஆட்சியில் அமைச்சர்களுக்கு சுதந்திரம் கிடையாது. திமுக முன்னணி நிர்வாகிகளை கைது செய்தும், 5 முறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சரை குண்டர் சட்டத்தில் கைது செய்தும் திமுகவினர் மீது அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது. தற்போது சாராயம் காய்ச்சுபவர்களும், வழிபறி செய்பவர்களும் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை என்ற சம்பவங்களால் மக்கள் வெறுத்துபோய் உள்ளனர். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுத்தரும் பொறுப்பு முதல்வருக்குதான் உண்டு. ஆனால் தண்ணீரை பெற்றுத்தர முடியாமல் இந்த அரசு செயலிழந்துள்ளது. மின்வெட்டு, மின்கட்டணை உயர்வு, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை உள்ளிட்டவையை கண்டித்தும், கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி திமுக சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் வருகிற அக்.14-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பேட்டியின் போது பேராசிரியர் ஆர்.டி.சபாபதிமோகன், நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ்விஜயராகவன், நகர அவைத்தலைவர் தென்னவன் ஆறுமுகம், நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.