கனடா இசை நிகழ்ச்சியை இளையராஜா புறக்கணிக்க திருமாவளவன் வேண்டுகோள்
கனடா நாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி சிங்களர் பின்னணியில் நடைபெறுவதால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள இசைஞானி இளையராஜா அந்நிகழ்ச்சியை புறக்கணிக்க


கனடா நாட்டில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி சிங்களர் பின்னணியில் நடைபெறுவதால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள இசைஞானி இளையராஜா அந்நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் தமிழர்கள் அவர் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே ஒரத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச பொதுமருத்துவ முகாமில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்...
தமிழகம் முழுவதும் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு குறித்து பொதுமக்களிடையே முதல்வர் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காவிரி நீர் சிக்கல் குறித்து முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு, நதிநீர் ஆணையம் தீர்ப்பு, கண்காணிப்புக்குழு அறிக்கை ஆகியவற்றை மதிக்காத கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மத்தியஅரசு 365 வது பிரிவை பயன்படுத்தி கர்நாடகஅரசு நடவடிக்கைகளை முடக்கி வைக்க வேண்டும். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு அனுப்புவதை நிறுத்தி வைக்க வேண்டும். கர்நாடகம் நீரை நிறுத்தி வைத்துள்ளபோது மின்சாரத்தை நாம் நிறுத்தி வைக்க வேண்டும். அப்போதுதான் கர்நாடகம் தமிழகத்திற்கு நீரை தருவார்கள்.
தமிழகத்தில் 15 மணி நேரத்திற்கான மேலான மின்வெட்டு கிராமப்புறங்களில் உள்ளது. தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மின்வெட்டை போக்க வேண்டும். கூடங்குளம் அனு உலையை மூடக்கோரி அக்.29-ல் நடைபெறும் சட்டசபை முற்றுகை போராட்டத்தில் எனது தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். சில்லரை வணிகம், காப்பீட்டுக்கழகம், ஓய்வூதியத்துறை ஆகியவற்றிலான அன்னிய முதலீட்டை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும். டெசோ மாநாடு தீர்மானங்களை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் நேரி்ல் சென்று நியுயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச்செயலாளரிடமும், ஜெனிவாவில் உள்ள மனிதஉரிமை மீறல் ஆணையத்திடமும் வழங்கவுள்ளனர். சர்வதேச நாடுகளின் ஆதரவு பெற டெசோ அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டால் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்போம். ஆனால் எந்த மாற்றமும் ஏற்படுவதாக தெரியவில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கருத்து தெரிவிப்போம். கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொலைநோக்கு பார்வையின்றி ஆறுகளை சுரண்டி வரும் நிலை உள்ளது. எனவே தமிழகஅரசு மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும். காந்தியடிகளை தேசத்தந்தையாக அறிவித்தும், ரூபாய் நோட்டில் காந்தி படத்தை போடும் மத்தியஅரசு அவரது மதுவிலக்கு கொள்கையை புறக்கணிக்கிறது. மதுவிலக்கு கொள்கையையும், தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். 2013 ஜனவரி முதல் மதுவிலக்கை அமல்படுத்த கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் வெகுமக்கள் இயக்கத்தை நடத்தவுள்ளது என தொல்.திருமாவளவன் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன், தயா.தமிழன்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...