/

அறிவு வீற்றிருக்க வேண்டும். அதிகாரம், பணம் அதற்கு சேவை செய்ய வேண்டும்: பழ.கருப்பையா

சேக்கிழாருக்கு மூன்றாம் குலோத்துங்கன் வெண்சாமரம் வீசியது போல் அறிவு வீற்றிருக்க வேண்டும். அதிகாரம், பணம் அதற்கு சேவை செய்ய வேண்டும் என பழ.கருப்பையா எம்எல்ஏ தெரிவித்தார்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2013, 12:11 pm

G.Sundararaj

சேக்கிழாருக்கு மூன்றாம் குலோத்துங்கன் வெண்சாமரம் வீசியது போல் அறிவு வீற்றிருக்க வேண்டும். அதிகாரம், பணம் அதற்கு சேவை செய்ய வேண்டும் என பழ.கருப்பையா எம்எல்ஏ தெரிவித்தார்.

சிதம்பரத்தில் தமிழ்ப்பேரவை சார்பில் சேக்கிழார் செந்தமிழ்த் திருவிழா கீழரதவீதி ராசி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பேராசிரியர் அழ.பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்ப் பேரவைத் தலைவர் கவிஞர் ராம.ஆதிமூலம் வரவேற்று பேசினார்.விழாவில் பழ.கருப்பையா எம்எல்ஏ இலக்கிய பேரூரையாற்றினார். அவர் பேசியதாவது: 

அப்பர், திருநாவுக்கரசர் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கையை மையமாக வைத்து வாழ்ந்து சென்றவர் திருநாவுக்கரசர். சங்க காலத்தில் இறை அச்சம் இருந்தது. ஆனால் தற்போது இறை அச்சம் குறைந்து போய் உள்ளது. இறை அச்சம் நம்மை ஒழுங்கப்படுத்தியது. காரைக்கால் அம்மையார் அறிவார்ந்த பெண் ஆவார். சைவ இலக்கியத்தை தூக்கி நிறுத்தியவர் அவர். சிவபெருமானே அவரை அம்மையே என்ற அழைத்தார். தற்போது ஆங்கிலேயேர்கள் கொண்டாடிய பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். பிறந்தநாளை கொண்டாடுவது தமிழர்களின் வழக்கம் கிடையாது. பிறப்பு என்பது துயரமானது என பெரியபுராணத்தின் வழியாக அறியப்பட்டுள்ளது. நமக்கு இன்னொரு பிறப்பு உண்டு என்ற எண்ணம் உண்டு. பிறப்பு என்ற துயரத்தை இன்றைய தலைமுறை கொண்டாடி வருகிறது. இங்கு தில்லைக்கூத்தன் ஸ்ரீநடராஜப் பெருமான் இடது காலை தூக்கியபடி உள்ளார். அதனை தூக்கிய திருவடி என்பார்கள். பிறப்பிலிருந்து விடுதலை அளிக்கும் திருவடி என்பதுதான் அதன் பொருள்.

பல்லவர்கள் நாட்டை ஆண்ட போது சமஸ்கிருதம் உச்சத்தில் இருந்தது. பல்லவர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து விலகி தமிழுக்காக பாடுபட்டார். தமிழ்நாட்டை தடம் புரட்டியவர் திருநாவுக்கரசர். தமிழர்களை ஒன்று திரட்ட வினை சட்டத்தை சற்று கீழே இறக்கி, கடவுளை உயர்த்தி புதிய கோட்பாட்டை உருவாக்கியவர் திருநாவுக்கரசர். ஞானசம்பந்தர் வேதத்தை அடிப்படையாக சிந்தித்தவர். நாம் ஆகமத்தை அடிப்படையாக சிந்தித்தோம். சைவ சித்தாந்த தத்துவத்தால்தான் ராஜராஜசோழன் அரசனாக வர முடிந்தது. சாதிவாரியாக பிரிந்து இருந்த தமிழர்களை ஒன்று திரட்டிய பெருமை திருநாவுக்கரசருக்கு உண்டு. பீடாதிபதி ஒருவர் தவறு செய்தார் என வழக்கு போடப்பட்டது. ஆனால் சிலர் பீடத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக்கூறினர். பீடத்திற்கு மரியாதை கிடையாது. அந்த பீடத்தில் அமர்ந்திருப்பவரின் செயல்களால்தான் பீடத்திற்கு தனி மதிப்பு ஏற்படுகிறது. சிவவேடம் அணிந்தவருக்கு மதிப்பு கிடையாது. சிவபெருமானின் கோட்பாடுகளை கொண்டவருக்குதான் மதிப்பு ஏற்படுகிறது. நல்ல நாடு என கிடையாது. நல்லவர்கள் வாழ்வும் நாடுதான் நல்ல நாடாகும் என பழ.கருப்பையா எம்எல்ஏ தெரிவித்தார்.

கோவை சிவப்பிரகாச சுவாமிகள், இலங்கை செயராசு ஆகியோர் இலக்கியப் பேரூரையாற்றினர். ஆதி.சிவராமவீரப்பன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசினை வழங்கினார்.  ராம.சின்னராசு நன்றி கூறி்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.