/

காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது: தமிழக உழவர் முன்னணி

காவிரி மேலாண்மை வாரியம் தற்போதைக்கு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2013, 10:39 am

G.Sundararaj

காவிரி மேலாண்மை வாரியம் தற்போதைக்கு தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகஅரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5-8-13 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதிகள் தற்போது காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் தற்போது அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்றும், தேவை ஏற்படுமானால் தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தினை அணுகலாம் என அறிவித்து வழக்கை 2014 ஜனவரிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. தற்போது காவிரியில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் நீர் கர்நாடக அணைகளில் தேக்கி வைக்க முடியாத மிகை உபரி நீராகும். நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் திறந்துவிட்ட நீர் அல்ல. அன்றன்றைக்கு உள்ள பருவ நிலையை பார்த்து உச்சநீதிமன்றம் நிலைப்பாடு மேற்கொள்வது வியப்பளிக்கிறது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை நிறுவ மத்தியஅரசு மறுத்து வருகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு இணையானது. அதனை செயல்படுத்த ஆணையிட வேண்டிய உச்சநீதிமன்றம் தற்போது தண்ணீர் வருவதை காரணமாக காட்டி தன் கடமையிலிருந்து நழுவுவது பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது. எனவே தமிழகஅரசு மத்தியஅரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விரைந்து செயல்பட வேண்டும் என கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.