

இந்திரா, பசுமை குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு இடைநிலை ஊதியம் பயனாளிகளிடம் பெற்றுத் தர ஊராட்சி தலைவரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவரும், வச்சக்காரப்பட்டி ஊராட்சி தலைவருமான ஆனந்தராமன், ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வச்சக்காரப்பட்டி ஊராட்சி தலைவராக இருந்து வருபவர் ஆனந்தராமன். இவர் ஊராட்சியில் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி வருகின்றார். இதுவரையில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2007-2008ல் நிர்மல் கிராம் புரஸ்கார் விருதும், 2008-09ல் உத்தமர் காந்தி விருதையும் பெற்றுள்ளேன்.தற்போது, ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் என்னை தனியாக சந்திக்க விரும்புவதாக ஊராட்சி விரிவாக்க அலுவலர் தேவராஜ், கடந்த மாதம் 29,30 ஆகிய நாள்களில் தொடர்ந்து தெரிவித்தார். அதன் அடிப்படையில் மே-30ம் தேதி தேதி இரவு 7 மணிக்கு விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தலைவர் அறைக்குச் சென்றேன்.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கலாநிதி, இந்திரா நினைவு குடியிருப்பு மற்றும் பசுமை குடியிருப்பு திட்ட வீடுகளுக்கு, பயனாளிகளிடம் இருந்து இடைநிலை ஊதியம் பெற்றுத் தருமாறு கூறினார். அதற்கு, நான் பயனாளிகளிடம் எந்த திட்ட குடியிருப்புகளுக்கும் பணம் கேட்டு பெறவில்லை எனக் கூறினேன். அதேபோல், மற்ற தலைவர்களிடம் இதேபோல் இடைநிலைத் தொகை கேட்டு பெற்றுக் கொள்ளுமாறு கூறினேன். இதையடுத்து ஆத்திரம் அடைந்த ஒன்றியக் குழு தலைவர் கலாநிதி தகாத வார்த்தைகள் பேசி கையாளும், நாற்காலியையும் தூக்கிப் போட்டு தாக்கினார்.
அதையடுத்து அவர்களுடன் இருந்த உதவியாளர் ரமேஷ் மற்றும் பெருமாள் ஆகியோரும் சேர்ந்து என்னை கையால் கடுமையாக தாக்கினார்கள். இதைத் தொடர்ந்து ஒன்றியக் குழு தலைவர் உயிருக்கு ஆபத்து வரும்படி பேசினார். அப்போது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கூலிப்படை வைத்து கொலை செய்ய ஏவினேன், ஆனால் காயங்களுடன் தப்பினாய். இனிமேல் வீடு புகுந்து வெட்டுவேன் எனவும் மிரட்டினார். பின்னர் வெளியே வந்தும் அலுவலக வளாகத்திலும் அவரது ஆள்கள் என்னை தாக்கவும், தகாத வார்த்தைகளையும் பேசினார்கள்.எனவே எனது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டால் மேற்படி மூன்று பேர்கள் காரணம் என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்தச் சம்பவம் நடந்த போது ஊராட்சி தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரும் இருந்தனர். இந்த நிலையில் மிரட்டல் சம்பவங்கள் எனக்கு மட்டுமில்லாமல், மற்ற தலைவர்களுக்கும் நடந்துள்ளன. எனவே இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் அளித்த மனுவில் வச்சக்காரப்பட்டி ஊராட்சி தலைவர் ஆனந்தராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி கூறியாதவது: ஆர்.ஆர்.நகரில் ஊராட்சி ஒன்றியத்திற்குரிய இடத்தில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சிலை வைக்கக் கூடாது என கிராம மக்களை தூண்டி விடுகிறார் என்பது குறித்து கடந்த வெள்ளிக்கிழமையே ஊராட்சி தலைவர் ஆனந்தராமன் மீது புகார் மனுவை ஆட்சியரிடம் அளித்துள்ளேன். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சங்க நிர்வாகியாக இருப்பதாலும், ஊராட்சி தலைவர்களின் கையொழுத்தை அனுமதியின்றி போட்டு ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.