குஜராத், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. அந்தந்த மாநில அரசுகளின் செயல்பாட்டைப் பொறுத்து இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வி கிடைக்கும் என்று பேசப்பட்டது. அதன்படி, குஜராத்தில் 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 4 சட்டசபைத் தொகுதிகளிலும் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மேற்கு வங்காளத்தில் ஹவுரா நாடாளுமன்றத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் பீகாரில் மகாராஜ் கஞ்ச் நாடாளுமன்றத் தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இது, அதன் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி, முக்கியமான ஒரு இடைத்தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தோல்வியைத் தழுவியுள்ளது தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எப்போதும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் லாலுவிடம் வெற்றியை அடகு வைத்துவிட்ட நிதிஷுக்கு பலரும் இப்போது அறிவுரை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்; ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், குறிப்பாக, பாஜக தலைவர்கள்!
தன்னுடைய கொள்கைகளில் இப்போது சுய பரிசோதனை செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறார் நிதிஷ் குமார் என்று பாஜக தரப்பு வெளிப்படையாக விமர்சித்திருக்கிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை!
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விமர்சித்ததாலும், மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்து, மோடி மீதான வெறுப்பை அதிகம் வெளிப்படுத்தியதாலும், தனக்கு சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு கிடைக்கும் என்று கணக்கு போட்டார் நிதீஷ். ஆனால், இப்படியெல்லாம் வெளிப்படுத்தியும், அவருக்குக் கிடைத்திருப்பது என்னவோ தோல்விதான். அதனால் ஐக்கிய ஜனதா தளத் தரப்பு இப்போது தாளத்தை மாற்றிப் போட்டு வாசிக்கத் தொடங்கியிருக்கிறது.
மோடியை விமர்சித்ததால், பாஜக தொண்டர்கள், மாநிலத் தலைவர்களுக்கு நிதிஷ் குமார் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், பாஜகவினர் இந்தத் தேர்தலில் சரியான ஒத்துழைப்பை அளிக்க வில்லை என்றும் ராகம் பாடத் தொடங்கியிருக்கிறார்கள்.
தோல்வி குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் வசிஷ்ட் நாராயண் சிங் கூறிய கருத்து இதனைப் பிரதிபலிக்கிறது. ”நரேந்திர மோடியை நிதிஷ் குமார் எதிர்த்ததால் பாரதீய ஜனதா கட்சியினர் இடைத்தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை. தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்ததும் தோல்விக்கு ஒரு காரணம்” என்று கூறியுள்ளார். இவரது கருத்து, பெரும்பாலான ஐக்கிய ஜனதாக் கட்சித் தொண்டர்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
இப்படி தோல்விக்கான காரணத்தை கட்சியில் சிலர் அடுக்கிக் கொண்டிருக்கும்போது, தேசிய அரசியலில் நிதிஷின் தோல்வி, மோடியுடனான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்டதுதான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிறுவ முயற்சி செய்கிறார்கள். இதன் வெளிப்பாடாக அவர்கள் காட்டுவது, புதன்கிழமை தில்லியில் நடந்த மாநில முதல்வர்களுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசனை குறித்த மாநாட்டில், நிதிஷை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு மோடி சென்றதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இத்தகைய வெளிப்பாடு தனக்கான இமேஜை பாதித்துவிடும் என்று கருதிய நிதீஷ் குமார், இந்தத் தோல்விக்கான காரணத்தை வேறு விதமாக நியாயப்படுத்த முயற்சி செய்துவருகிறார்.
அந்தத் தொகுதி ஏற்கெனவே ராஷ்டிரீய ஜனதா தளத்திடம் இருந்த தொகுதியே. அந்தத் தொகுதி எம்.பி., இறந்துவிட்ட காரணத்தால் வந்த இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் தோற்றிருந்தால், அதுகுறித்து லாலு பிரசாத் யாதவ்தான் மிகவும் கவலைப் பட்டிருக்க வேண்டும். எனக்கு இதனால் ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார் நிதீஷ் குமார்.
இருப்பினும், சற்றே சப்பைக் கட்டு கட்டும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவோ, இந்தத் தோல்வியில், தோல்விக்கான வாக்குகள் இடைவெளி அதிகரித்திருப்பது கவலை தரும் விஷயம். இது குறித்து விசாரணை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தத் தோல்வி மாநில பாஜக வட்டத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கிரிராஜ் சிங், இதுகுறித்துக் கூறியபோது, தோல்விக்காக நிதிஷ் குமார் கூறும் காரணத்தை ஆமோதிப்பதற்கில்லை. அது ராஷ்டிரீய ஜனதா தளத்திடம் இருந்த தொகுதியாகவே இருக்கட்டுமே! ஆனால், நிதிஷின் கருத்து சுயசமாதானம் செய்து கொள்வதற்காகக் கூறப்படுவதுதான்!” என்கிறார்.
இதனிடையே பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடந்த கால செயல்பாடுகளை சற்றே திருப்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
பீகாரில் பாஜகவின் சுஷில்குமார் மோடி துணை முதல்வராக உள்ளார். அமைச்சரவையில் பாஜகவினர் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை முன்னிறுத்துவது என்பது குறித்து பேச்சு எழுந்த போது அதை நிதிஷ்குமார் பகிரங்கமாக எதிர்த்தார். மேலும், அவர் கூறிய வார்த்தை, பாஜகவில் சலசலப்பை ஏற்படுதியது. பீகாரில் நான்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் என்று அவர் சொன்னபோது, மாநில பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது, என்றாலும் அவர்கள் வெளிக்காட்டவில்லை. மேலும் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் அணிக்கு மாற இருப்பதாகவும் தில்லி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், பீகார் இடைத்தேர்தலில் நிதிஷ்குமார் படுதோல்வியை சந்தித்துள்ளார். இது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துவிட்டது.
பாஜகவுக்கும் நிதிஷுக்கும் இருக்கும் உறவு அவ்வளவு சுகமாக இல்லை என்பது தெரிகிறது. மோடியை வைத்து நிதிஷுக்கும் பாஜகவுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது என்றாலும், நிதிஷின் செயல்பாடுதான் இத்தகைய இடைவெளியை அதிகப்படுத்திவிட்டது என்கிறார்கள் பாஜகவினர்.
தேர்தல் நேரத்தில், பாஜக தலைவர்களை நிதிஷ் அழைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்துக்கு வருமாறு பாஜக மாநிலத் தலைவர்கள் எவருக்கும் தொலைபேசியில்கூட அழைத்துப் பேசவில்லை. தங்கள் வேட்பாளரை ஆதரிக்குமாறு உள்ளூர் பாஜகவினரிடம் கூட அவர் எதுவும் கோரவில்லை என்று அதிருப்தி வெளியிட்டுள்ளனர் பாஜகவினர்.
ஆனால், இதனை வெளிக்காட்டியுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினர் அலி அன்வர், இது கூட்டணியில் நிலவிய மறைமுகப் போரின் வெளிப்பாடுதான்; குறிப்பாக, மோடியை எதிர்த்தால் நிதிஷுக்கு தோல்வி கிட்டும் என்று காட்டுவதற்காக பாஜகவினரே எங்கள் வேட்பாளருக்கு எதிர்த்து வேலை செய்துள்ளனர். எங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இனி பீகாரில் மட்டுமல்ல, அடுத்த வருடம் நடக்கவுள்ள 2014 பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய ஜனதா தளத்துடனான இந்தக் கூட்டணி கூட எத்தகைய வெற்றியைப் பெற்றுத் தரப்போகிறது என்பதை இப்போதே எண்ணிப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் பாஜகவினர். ஒரே ஒரு எம்.பி., தொகுதி தேர்தல் தோல்வி, ஒரு கூட்டணியையே புரட்டிப் போட்டு விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

குளித்தலையில் வடமாநிலத்தவா் கழுத்தை அறுத்துக்கொலை: ஆட்டு வியாபாரி கைது

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு ரூ.418 கோடியில் அடிப்படை வசதிகள்: கரூா் வேட்பாளா் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


