மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையி்ல்லாததால் தான் எவ்வித வேறுபாடின்றி 33 சதவீதம் கூடுதலாகவே தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
ஆண்டு தோறும் மாநில அரசுகள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஒதுககீடு குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் மத்திய திட்டக்குழு உறுப்பினர் மாநில முதல்வர்களுடன் விவாதம் செய்து ஒதுக்கீடு செய்வது என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல், நிகழாண்டில் பணிகள் மேற்கொள்வதற்கு 37 ஆயிரம் கோடி தேவையென அறிக்கை அனுப்பியது. இது தொடர்பாக தமிழக முதல்வரும் மத்திய திட்டக்குழு துணைத் தலைவரை சந்தி்த்து பேசினார். அப்போது, தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக குற்றஞ்சாட்டினார். எனவே மாற்றாந்தாய் மனப்பான்மையில்லாததை சுட்டிக் காட்டுகிற வகையில் தமிழகம் கேட்டதை விட கூடுதலாக ரூ.128 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது கடந்தாண்டை விட 32.8 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் கடந்தாண்டு ரூ.61 கோடி குறைவாக கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், நடப்பு ஆண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் மத்திய அரசு திட்டங்களுக்கு ரூ.9 கோடி தனியாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புள்ளதாக திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நிகழாண்டில் மத்திய அரசின் நேரடி நிதி உதவி 12 ஆயிரம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக மக்களின் தேவையறிந்தும், நலன் கருதியும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், மத்திய துணை திட்டக் குழு தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கும், இதற்கு வழிகாட்டியாக இருந்த அன்னை சோனியாகாந்திக்கும் நன்றியைக் கூறிக் கொள்கிறேன். எப்போதுமே மத்திய அரசு, தமிழகத்திற்கு உதவி செய்வதற்கு தயராகவே இருக்கிறது. அதை பயன்படுத்தி கொள்வதான் மூலமே தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.