/

ஊதிய மாற்றம் குறித்து மூன்று நபர் குழு அறிக்கையை வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்: கு.பாலசுப்பிரமணியன்

சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் தேர்தல் அறிவிப்பில் தெரிவித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த

News image
Updated On :25 மார்ச் 2013, 11:04 am

G.Sundararaj

ஊதிய மாற்றம் குறித்து தற்போதைய ஆட்சியில் கிருஷ்ணன் தலைமையிலான மூவர் குழு நியமிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டு சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் தேர்தல் அறிவிப்பில் தெரிவித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அதுபோன்று பதவி உயர் பெற்றதும் பென்ஷன் இழந்து நிற்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியஅரசு மானியத்தொகையை ரொக்கமாக வழங்குவதை நடைமுறை படுத்தக்கூடாது. அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முறைகேடுகளை தவிர்க்க பொதுவிநியோக திட்டத்தின் அனைத்து பணிகளையும் நூறு சதவீத கணினி மயமாக்க வேண்டும். தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவிநியோகத் திட்டத்தை மேலும் வலுமைபடுத்தி, விரிவுபடுத்த வேண்டும். அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்களின்றி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் ரேஷன் கடை மூலம் வழங்க தமிழகஅரசு முன்வர வேண்டும். 11 சிமெண்ட் கம்பெனிகள் சிண்டிகேட் அமைத்து 2 ஆண்டுகளில் செய்யக்கூடிய உற்பத்தியை குறைத்து, தேவையை அதிகரித்து, விலையை இரண்டு மடங்காக உயர்த்தி விற்பனை செய்வதால் மக்கள் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். மத்தியஅரசு போட்டியினை உறுதி செய்யும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடுகளில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.165 விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒரு மூட்டை ரூ.330ககு விற்கப்படுகிறது. எனவே ரூ.7200 கோடி நிதியை தண்டம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களை ரேஷன்கடை மூலம் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி விரல்ரேகை, விழித்திரை ஆகியவற்றை பயன்படுத்தி டிஜிட்டல் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைபடுத்தாதது ஆச்சரியமாக உள்ளது. பொதுவிநியோக திட்டத்தில் பணியாளர்களை பொறுத்தவரை பொருள்களை இறக்கும் போது போக்குவரத்து கட்டணத்தை நிர்வாகமே செலுத்துகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பணியாளர்களிடம் பொருள்கள் இறக்கும் போது மிரட்டி பணம் பெறும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 26 ஆயிரம் ரேஷன் கடைகளும், நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 4 ஆயிரம் கடைகளும் உள்ளன. இரண்டு வித பணியாளர்களுக்கும் ஒரே பணிதான். ஆனால் நுகர்பொருள் வாணிபக்கழக மூலம் இயங்கும் ரேஷன் கடை பணியாளருக்கு ரூ.15ஆயிரம் அடிப்படை ஊதியம். ஆனால் ரேஷன் கடை பணியாளருக்கு ரூ.4500 ஊதியம்தான். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மேலும் பொதுவிநியோகத் திட்டத்தை தனிதுறையாக அரசு அறிவிக்க வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்.8-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஜி.ஜெயச்சந்திரராஜா, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் சங்க மாநிலத் தலைவர் பெ.நல்லதம்பி, நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் சா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.