தமிழக - கேரள எல்லையில் தொடர்கதையாக உள்ள ரேஷன் அரிசி கடத்தல்
இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி பெரும்பாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.


தமிழக - கேரள எல்லைகளில் தொடர்கதையாக உள்ள ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கவும், கள்ளச் சந்தைக்காரர்களுக்கு ரேஷன் அரிசி எளிதில் கிடைப்பதை தடுக்கவும் அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
÷தமிழகத்தைப் பொறுத்தவரை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நான்கு பேர் கொண்ட ரேஷன் அட்டைக்கும் மாதம் 20 கிலோ, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு 35 கிலோ என அரிசி வழங்கப்படுகிறது.
÷பருவ மழை பொய்த்தாலும், டெல்டா பகுதிகள் தண்ணீர் இன்றி வாடினாலும் தமிழக அரசு இந்த அரிசியை இந்திய உணவுக் கட்டுப்பாட்டுக் கழகத்திடமிருந்து கிலோவுக்கு ரூ.5.65 பைசா வீதம் விலை கொடுத்து வாங்கி, நியாயவிலைக் கடைகள் மூலமாக விநியோகித்து வருகிறது.
÷ஆனால், கேரளத்தில் அம் மாநில அரசு யாருக்கும் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி வழங்குவதில்லை. தமிழகத்தில் மட்டுமே தேவையுடையவர், தேவையற்றவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.
÷இதில் அரிசியை வாங்கி சமைத்து உண்பவர்கள் ஒரு பங்கினர் என்றால், ரேஷன் அரிசியை மொத்தமாக சேமித்து வைத்து விற்போரும் ஒரு பங்கினர். இவ்வாறு தமிழகத்தில் விற்கப்படும் ரேஷன் அரிசிக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.
÷இதன் காரணமாகவோ என்னவோ தற்போது தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
÷கோவையில் இது வாடிக்கையாக நடக்கும் விஷயமாக உள்ளது. கோவையிலிருந்து கேரளத்துக்கு செல்ல வாளையாறு, வேலந்தாவளம், வடக்குநாடு, நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், செம்மனாம்பதி போன்ற வழிகள் உள்ளன. இவை தவிர காட்டு வழிகளும் நிறைய உள்ளன.
÷கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முறைகேடாக சேகரிக்கப்படும் ரேஷன் அரிசி, ரகசியமாக கேரளத்துக்கு கட்டத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. ஆனால் தற்போதைய உணவுக் கடத்தல் தடுப்பு அதிகாரிகளின் நடவடிக்கையால் இது கொஞ்சம் கட்டுப்பட்டுள்ளது.
÷கடந்த ஆண்டில் மட்டும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு கடத்தப்பட்ட 175 டன் ரேஷன் அரிசி வாகனங்களுடன் பிடிபட்டுள்ளது. அரிசி கடத்திய குற்றத்துக்காக 12 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். நடப்பாண்டில் இதுவரை 39 டன் ரேஷன் அரிசி பிடிபட்டுள்ளது. 6 பேர் இந்த குற்றத்துக்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கோவை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியது:
÷தக்க பொருளாதாரம் உடையவர்கள் ரேஷன் அரிசியை கட்டாயத்துக்காக வாங்கி, தேவைப்படுவோருக்கு கிலோவுக்கு ரூ.3 அல்லது ரூ.4 விலையில் விற்று விடுகின்றனர்.
÷கள்ளச் சந்தைக்காரர்கள் அவற்றை ஆங்காங்கே சேகரித்து, மொத்தமாக கேரளத்துக்கு கடத்திச் சென்று கிலோவுக்கு ரூ.15 விலையில் விற்று விடுகின்றனர்.
சிலர் அவற்றை "பாலிஷ்' செய்து உள்ளூரிலேயே கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இது அரசுக்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
÷இருப்பினும் கடும் நடவடிக்கைகளால் முன்னர் இருந்ததைக் காட்டிலும் தற்போது 10 சதவீதம் குற்றங்கள் இதில் குறைக்கப்பட்டுள்ளன என்றனர்.
÷இது குறித்து கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அண்ணாதுரை கூறுகையில், பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார்.
÷ஆனால், ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவோர் வெளியில் வந்து மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுவதுதான் இதில் வேடிக்கை.÷எனவே, கடத்தலில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுவோருக்கு அவர் வெளியில் வந்து வேறு தொழில் செய்யும் வகையில் சிறைக்குள் தொழில் பயிற்சிகள் அளிக்கலாம். மேலும் வெளியில் வந்தவுடன் தொடர் கண்காணிப்பில் வைப்பதன் மூலமாகவும் இதைக் கட்டுப்படுத்த முடியும்.
÷நியாயவிலைக் கடைகளைக் கண்காணிப்பதுடன், ரேஷன் அரிசி தேவைப்படாத பொதுமக்களை கணக்கெடுத்து அவர்களுக்கான விநியோகத்தை நிறுத்த வேண்டும். கள்ளச் சந்தைக்காரர்களுக்கு ரேஷன் அரிசி எளிதில் கிடைப்பதைத் தடுக்க வேண்டும். இதன் மூலமாக அரசுக்கு ஏற்படும் இழப்பையும், அரிசி கடத்தலையும் பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
÷இன்றைய சூழலில் கேரளத்திலிருந்து கோவை வரும் பேருந்து பயணிகள் கூட ஒருசிலர் திரும்பிச் செல்லும்போது, பைகளில் அரிசி கொண்டு செல்வதைக் காண முடிகிறது. எனவே இதில் உள்ள முக்கியத்துவம் கருதி, அரிசி கடத்தலைத் தடுக்க அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
அகதிகள் முகாமுக்கு
தரமற்ற அரிசியா?
இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி பெரும்பாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள மக்களும் தங்களுக்கு வழங்கப்படும் அரிசியை சேமித்து கள்ளச் சந்தைக்காரர்களுக்கு விற்று விடுகின்றனர். இந்த அரிசியை சேகரித்து, பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ளவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கின்றனர். எனவே, அகதிகளுக்கு நல்ல அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் இலங்கை அகதிகள் முகாமின் தலைவர் புஷ்பராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...