/

சங்கராபுரம் அருகே கோயில் கட்டுவதில் தகராறு: வார்டு உறுப்பினர் வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கோயில் கட்டுவது தொடர்பாக எழுந்த தகராறில் வார்டு உறுப்பினர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :23 மே 2013, 4:22 am

ச.​ கார்த்​தி​கே​யன்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கோயில் கட்டுவது தொடர்பாக எழுந்த தகராறில் வார்டு உறுப்பினர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சங்கராபுரத்தை அடுத்த எஸ்.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாத்துரை என்பவர் மகன் விஸ்வநாதன் (38). இவர் வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி வனிதா. திருமணமாகி 8 மாதம்தான் ஆகிறது.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் என்பவர் அந்தப் பகுதியில் மாரியம்மன் கோயில் கட்டித் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையாம். எனவே அதன் பின்னர் அந்தப் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து பாலாஜி என்பவரை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவரும் தேர்தல் நேரம் அதே வாக்குறுதியைக் கொடுத்தார். ஆனால் அவரும் அதை நிறைவேற்ற முனையவில்லையாம். இந்நிலையில், கிராமப் பொதுமக்கள் ஒன்றிணைந்து வார்டு உறுப்பினர் விஸ்வநாதனிடம் கூறி, கோயில் கட்டும் பணியில்  இறங்கினர்.

சென்ற வாரம்தான் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இன்று காலை கோயிலுக்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. 

இந்நிலையில், தங்களிடம் கேட்காமல் எப்படி ஊர் மக்களுடன் சேர்ந்து பூமி பூஜை நடத்தலாம் என்று முன்னாள், இந்நாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறவினர்கள் சிலர் விஸ்வநாதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை பிரதான சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு 1 மணி அளவில் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊர்ப் பொதுமக்கள் முன்னாள் இந்நாள் ஊராட்சி மன்றத் தலைவர்களின் வீடுகளை உடைத்து அடித்து நொறுக்கினர். இதில் அவர்களின் 7 வீடுகள் சேதம் அடைந்தன. இதை அடுத்து இன்று அதிகாலை அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.