தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடியாது: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

News image
Updated On :9 அக்டோபர் 2013, 7:41 am

ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிதம்பரம் நகருக்கு புதன்கிழமை வருகை தந்த ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவர் சமீபத்தில் கடிதம் அனுப்பி ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கேட்டிருந்தார். திமுக தொடர்ச்சியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கமாக இருந்தது. அந்த அரசு எடுத்த அனைத்து மக்கள் விரோத கொள்கைக்கும், நடவடிக்கைக்கும் திமுகவிற்கு பங்கு உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு, உரத்திற்கு மானியத்தை குறைத்தது என ஏராளமாக சொல்லலாம். சமீபத்தில் ஆட்சியிலிருந்து விலகினார்கள். விலகிய பிறகு கடைசியாக நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தொடரில் உணவு பாதுகாப்பு சட்டம், பென்ஷன் நிதிசட்டம் ஆகியவற்றை ஆதரித்தார்கள். திமுக அமைச்சரவையில் இல்லாவிடிலும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டங்களையும்  ஆதரித்தது. ஆகவே மார்க்சி கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடியாது.

இலங்கையில் வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்று விக்னேஸ்வரன் பதவி ஏற்றிருக்கும் வேளையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு சென்றுள்ளார். 1987 இந்திய-இலங்கை ஒப்பந்த 13வது சட்டதிருத்தத்தின்படி வடக்கு மாகானங்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தொடர்ந்து மத்தியஅரசு மற்றும் இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு வடக்கு, கிழக்கு மாகானங்களை பிரித்து விட்டனர். எனவே 1987-ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 13 வது சட்ட திருத்தத்தம் கொண்டு வந்து வட கிழக்கு மாகானங்களுக்கு போலீஸ், நிலம் உள்ளிட்ட அதிகார பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும். இலங்கை அரசை மத்தியஅரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சனை பொறுத்தவரை தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. சமீபத்தில் கொழும்பில் இரண்டு முறை இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை மூலம்தான் இப்பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். எனவே தமிழக முதல்வர் இருநாட்டு பிரதிநிதிகள் முன்னிலையில் வருகிற டிசம்பர் மாதம் இருநாட்டு மீனவர்களை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கும் முயற்சியை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் இயற்கை வளமான கிராணைட், தாது மணல் ஆகியவற்றை தனியார் கொள்ளையடிப்பதை அனுமதிக்கக்கூடாது. இரண்டையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். நெல், கரும்புக்கு மத்தியஅரசு அறிவித்துள்ள விலைக்கு வெளிமார்க்கெட்டில் கூடுதலாக கிடைக்கிறது. எனவே மத்தியஅரசு அறிவித்த விலையை விட நெல், கரும்புக்கு தமிழகஅரசு கூடுதல் விலையை வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை மொழிவழி மாநிலம் என்பதுதான் எங்களது முடிவு. தமிழ் பேசுபவர்கள் தமிழ்நாடு, கண்ணடம் பேசுபவர்கள் கர்நாடகம், மலையாளம் பேசுபவர்கள்கள் கேரளம், தெலுங்கு பேசுபவர்கள் ஆந்திரா என்பதுதான் எங்கள் கருத்து. ஆகவே மொழிவழி மாநிலத்தை பிரிக்க கூடாது.

உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டவர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் தீர்ப்பள்ளிதுள்ளது. எனவே இதுகுறித்து மத்தியஅரசு அவசர சட்டம் கொண்டு வருவதை விட நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது சரி. ஆனால் மேல்முறையீடு செய்து குற்றமற்றவர் என்று நிருபிக்கப்பட்டால் நியாயம் இல்லாமல் போய்விடும். எனவே மேல்முறையீட்டை வழக்கை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். தீர்ப்பு வரை 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யலாம் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை கொறடா கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.