விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் முறைகேடு செய்த 4 விற்பனையாளர்களை பணியிடை நீக்கம் செய்து இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருள்களை விற்பனையாளர்கள் முறைகேடு செய்து வருவதாக இணைப்பதிவாளருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் பறக்கும் படை ஆய்வுக் குழு ராஜபாளையம், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசி ஆகிய வட்டாரப் பகுதிகளில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நியாய விலைக்கடைகளில் இருப்புக் குறைவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதில், முறைகேடு செய்த கோவிலாங்குளம் நியாயவிலைக்கடை விற்பனையாளர் செல்வராஜ், ஆமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நியாய விலைக்கடை எண்-1ன் விற்பனையாளர் ஜக்கையா, ராஜபாளையம் நுகர்வோர் பண்டகசாலையின் ஆவரம்பட்டி நியாய விலைக் கடையின் விற்பனையாளர் நாகராஜன், சிவகாசி நியாய விலைக் கடை எண்-7ன் விற்பனையாளர் கணேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பறக்கும் படை அலுவலர்கள் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் மண்டல இணைப்பதிவாளர் ஜி.குருமூர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








