ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாசனவாய்க்கால்களில் நீர் திறந்துவிடாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம்: மோட்டார் வைத்து நீர் இரைக்கும் விவசாயிகள்

காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்காளில் பாசன வாய்க்காலில் போதுமான அளவு நீர் திறந்து விடப்படாததால் வயலில் நீரின்றி நெற்பயிர்கள் கருகும்

News image
Updated On :30 செப்டம்பர் 2013, 2:44 pm

ஜி.சுந்தரராஜன்

காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்காளில் பாசன வாய்க்காலில் போதுமான அளவு நீர் திறந்து விடப்படாததால் வயலில் நீரின்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் பருவமழை பொய்த்ததாலும், டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு அக்டோபரில் மேட்டூர் அணை திறக்கப்படாததாலும் நேரடி விதைப்பு முறையில் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர். நடப்பு ஆண்டில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வீராணம் ஏரி பாசனம் மூலம் 40 ஆயிரம் ஏக்கர்களிலும், வடக்குராஜன் வாய்க்கால் பாசனம் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் விதைத்து சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடந்த 10 தினங்களாக கடும் வெய்யல் அடித்து வருவதால் போதிய நீரின்றி நேரடி நெல் விதைப்பு முறையில் விதைத்த நெல்விதைகள் காய்ந்து வருகின்றனர். விரைவில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருநாரையூர், பிள்ளையார்தங்கல், எடையார், கூடுவெளிச்சாடி, கொடியாளம், வடமூர், முகையூர், பரிவிளாகம், பெருங்காலூர், சிவக்கம், ஆட்கொண்டநத்தம், துரைப்பாடி, துணிஞ்சிரமேடு, பொன்னாங்கன்னிமேடு, வக்காரமாரி, இளநாங்கூர், காட்டுக்கூடலூர், செட்டிமேடு, பன்னப்பட்டு, நாஞ்சலூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசன கிளை வாய்க்காலில் நீர் வராததால், அருகாமையில் நீண்ட தூரத்தில் உள்ள பொன்னேரி, மணவாய்க்கால், பாதிமுத்தான் ஓடை ஆகியவற்றிலிருந்து மின்மோட்டோர் மூலம் நீண்ட தூரம் பைப்போட்டு நீரை தங்களது வயலுக்கு கூடுதல் செலவு செய்து கொண்டு வருகின்றனர். சில இடங்களில் சாலைகளை கடந்த பைப் மூலம் தங்களது வயலுக்கு நீரை மோட்டார் மூலம் கொண்டு செல்கின்றனர். எனவே கீழணையிலிருந்து வடக்குராஜன் வாய்க்கால் மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரியிலிருந்து கிளை வாய்க்கால்களில் முழுக்கொள்ளவு நீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நாரைக்கால் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்ததாவது:

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கீழணையிலிருந்து வீராணம்ஏரிக்கு நீரை கொண்டு வந்து தேக்கி சென்னைக்கு குடிநீர் அனுப்பவுதிலேயே குறியாக உள்ளனர். காவிரி டெல்டா கடை மடை பகுதியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள வேளாண் பாசனத்தை பற்றி அவர்கள் கவலையே படுவதில்லை. மேலும் இந்த ஆண்டு கடந்த 6 மாதங்களாக ஏரி மற்றும் பாசன வாய்க்கால்கள், ஆறுகள் காய்ந்து கிடந்தும் முற்றிலும் தூர்வாரப்படவில்லை. இதனால் கடை, மடை பகுதி வரை பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் சென்றடையவில்லை. மேலும் பல கிளை வாய்க்கால்களுக்கும் நீர் சென்றடையவில்லை. கடந்த 15 தினங்களாக அடிக்கும் கடும் வெய்யலில் நீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் பயிர்களை காப்பாற்ற மின்மோட்டார் வைத்து விவசாயிகள் கூடுதல் செலவும் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. களை மண்டியுள்ள நெற்பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும் என்றால் வயல் ஈரமாக இருக்க வேண்டும். இதனால் களைக்கொல்லி மருந்தும் அடிக்க முடியாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர் என்கிறார் கே.வி.இளங்கீரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.