பாஜக, காங்கிரஸ் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் விசுவநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பிரசாரம்


பொருளாதாரக் கொள்கையில் பாரதிய ஜனதாவும், காங்கிரசும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷணன் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் போட்டியிடும் இடதுசாரிக் கூட்டணியின் வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு வாக்கு சேகரிக்கும் பிரசாரக் கூட்டம் மதகடிப்பட்டு கடைவீதியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பிரதேச செயலாளர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் முருகன், கலிவரதன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், ஆர்எஸ்பி மாநில தலைவர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில் கலந்து கொண்ட ஜி.ராமகிருஷணன் பேசியதாவது:
தில்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மதச்சார்ப்பற்ற கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் அதிமுக சார்பில் கையெப்பமிட்டு சில தினங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். தேர்தல் பிரசாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசை விமர்சித்து வரும் அவர் ஏன் பா.ஜ.கவையும், அதன் பிரதமர் வேட்பாளாரையோ ஏன் ஒரு கூட்டத்தில் கூட விமர்சிக்க வில்லை. இது தமிழ் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இன்றைக்கு ராமர்கோவில் கட்டுவோம் என்று வெளிப்படையாக பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும் இதுகுறித்து எந்த பதிலையும் ஜெயலலிதா கூறாதது ஏன்?
காங்கிரஸ், பா.ஜ.கவோடு எந்த வித தொடர்பும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி இன்றைக்கும் வெளிப்படையாக தனது நிலையை அறிவிக்க மறுத்து வருகிறார்.
வரலாறு காணாதவகையில் அலைக்கற்றை ஊழலில் சிக்கிய திமுகவை தமிழ்மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டனர். இந்த நிலையில் தான் மாற்று கொள்கையை முன்வைத்து இடதுசாரிகட்சிகள் தமிழகத்திலும்,இந்தியாவிலும் இன்றைக்கு தேர்தலை சந்திக்கவுள்ளனர். இந்த தேர்தல் இடதுசாரிகட்சிகளுக்கு புதிய அத்தியாத்தை படைக்க திருப்பு முனையாக அமையும். ஊழலையும்,மதவாதத்தையும் எதிர்க்க இடதுசாரிகட்சிகளை தவிர வேறு எந்த கட்சிகளுக்கும் அருகதையில்லை.பொருளாதாரக் கொள்கையில் பாரதிய ஜனதாவும், காங்கிரசும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
என்.ஆர்.காங்கிரஸை புறக்கணிக்க வேண்டும்.வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் புதுச்சேரி மக்கள் அதற்கு மாறாக இன்றைக்கு மதவாத கட்சியோடு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருப்பது எதிர்காலத்தில் பல தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. காங்கிரஸ் பாராம்பரியத்தில் வந்த ரங்கசாமியின் இந்த முடிவு புதுச்சேரி மக்களை ஏமாற்றும் செயல். அவரது கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
ஊழலில் சிக்கியுள்ள காங்கிரஸ்,திமுக, மதவாத கட்சிகளுக்கு மாற்றாக உள்ள இடதுசாரிகட்சி வேட்பாளர் ஆர்.விசுவநாதனுக்கு கதிர்அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்.
இதேப்போல் திருக்கனூரிலும் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...