ஆனால் அரசியல்வாதிகள் தெலுங்கு மக்களை ஒருபொருட்டாக மதிப்பதில்லை. விஜயநகரப் பேரரசின் வழியில் ஆட்சி செய்து வந்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு வளங்களை ஆந்திராவிற்கு சிறிதும் கொண்டு செல்லவில்லை. தமிழகத்தில் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தஞ்சை, செஞ்சி, திருச்சி, பெரம்பலூர், சென்னை, கோவை, வேலூர் முதலிய முக்கிய நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு சிறந்த முறையில் ஆட்சி செய்தார்கள். இன்றும் அவர்கள் கட்டிய கோவில்கள், வெட்டிய ஏராளமான ஏரிகள், குளங்கள், கோட்டைகள், கோபுரங்கள், மாளிகைகள், மண்டபங்கள், சாலைகள், தேர்கள் என பல சிறந்த சின்னங்கள் அவர்கள் நினைவாக நம் தமிழகத்தில் இன்றும் வெளிநாட்டவர் உள்பட அனைவரும் பாராட்டும் வகையில் அழகுபடச் செய்து அவர்கள் ஆட்சி புரிந்த நகரங்களில் விட்டுச் சென்றுள்ளார்கள். பல அரசு அலுவலகங்கள் நாயக்கர் காலக் கட்டடங்களில் இன்றும் இயங்குகின்றன.