கூடன்குளத்தில் 6 அணுஉலைகள் நிறுவத் தேவையான கட்டமைப்பு உள்ளது. வரும் 2015 இல் மார்ச் மாதம் ரூ. 39 ஆயிரத்து 746 கோடி மதிப்பில் 3,4 ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி தொடங்க இருப்பதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கூடன்குளம் அணுஉலையை சுற்றியுள்ள 13 கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும், அப்பகுதியில் வசிக்கும் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த அணுஉலை சார்பில் ரூ. 200 கோடியும், மத்திய அரசு ரூ. 300 கோடியும் வழங்குகிறது.
அணுஉலை சார்பில் ஏற்கனவே ரூ. 20 கோடி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ரூ. 55 கோடிக்கான காசோலையை ஆட்சியர் மு. கருணாகரனை சந்தித்து அணுஉலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் வழங்கினார். அப்போது வளாக இயக்குநர் ஆர்.சுந்தர் அளித்தப் பேட்டி: கூடன்குளம், அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
10 ஆயிரம் பேருக்கு வீடுக் கட்டி கொடுக்கப்பட உள்ளது. அப்பகுதியில் ரூ. 92 கோடியில் தூண்டில் வளைவு, மீனவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களும், ரூ. 10 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ. 68 கோடியில் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது.
கூடன்குளத்தில் முதல் அணுஉலை மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை 300 யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டு தென்னக பாதையில் இணைக்கப்பட்டுள்ளது. பரிசாத்த முறையில் மின் உற்பத்தி செய்வதால் யூனிட் ரூ. 1.22 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கூடன்குளம் அணுஉலை ரூ. 366 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.