ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

56 ஆண்டுகளில் 21 முறை நிரம்பிய மணிமுத்தாறு அணை!

மணிமுத்தாறு அணை 56 ஆண்டுகளில் 21 முறை நிரம்பியுள்ளது. 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த அணை நிகழ் பருவத்தில் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114.50 அடியாக இருந்தது. ஓரிரு நாளில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

News image
Updated On :19 டிசம்பர் 2014, 8:48 am

ஷேக் அப்துல்காதர்

மணிமுத்தாறு அணை 56 ஆண்டுகளில் 21 முறை நிரம்பியுள்ளது. 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த அணை நிகழ் பருவத்தில் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114.50 அடியாக இருந்தது. ஓரிரு நாளில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள், விவசாயிகளின் நலனைக் கருத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை நீர் ஆதாரத்தை கொண்டு 1958 இல் மணிமுத்தாறு அணை
கட்டப்பட்டது. அணையின் முழு நீர்மட்டம் உயரம் 118 அடி. 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் விநாடிக்கு 60,000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் கொண்ட 7 உபரிநீர் வழிந்தோடி அமைக்கப்பட்டுள்ளது.

அணையின் வரலாற்றில் கடந்த 1992 இல் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி ஏற்பட்ட
வெள்ளத்தில் அணைக்கு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்ததை அடுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணையின் மூலம் இவ்விரு மாவட்டங்களில் 27,086 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணையில் 40 அடியில் பெருங்கால் மதகு, 80 அடியில் பிரதான கால்வாய் ஆகியன அமைந்துள்ளது. அணை இதுவரை 56 ஆண்டுகளில் 21 முறை நிரம்பியுள்ளது. கடந்த 2009 இல் டிச. 24 ஆம் தேதி நிரம்பியது. 5 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ் பருவத்தில் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

வெள்ளிக்கிழமை அணைக்கு விநாடிக்கு 2,582 கனஅடி நீர்வரத்து இருந்தது. பிற்பகல் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114.50 அடியாக இருந்தது. அணையில் 2.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடிப்பதால் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணைகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில் பிரதான அணையான மணிமுத்தாறு அணையும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 32, பாபநாசம் கீழ் அணை 17, சேர்வலாறு அணை 16, மணிமுத்தாறு அணை 2.4, கடனாநதி அணை 8, ராமநதி அணை 7, குண்டாறு அணை 6, கன்னடியன் அணைக்கட்டு 7, தென்காசி 7.4, ராதாபுரம் 4, நான்குனேரி 2, அம்பாசமுத்திரம் 2.2, சேரன்மகாதேவி 3.6, ஆலங்குளம் 9, திருச்செந்தூர் 1.

4,000 கனஅடி திறப்பு: நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3,531.41 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 4,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டு்ள்ளது.  

கடனாநதி அணையின் நீர்மட்டம் 84.50 அடியாக இருந்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த 353 கனஅடி உபரிநீர் கருணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு 62 கனஅடி நீர்வரத்து இருந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை இப்பருவத்தில் 3 ஆவது முறையாக நிரம்புகிறது.

பிற அணைகளின் நீர்மட்டம்: கருப்பாநதி அணை 64.64 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 95.50 அடி, வடக்குப் பச்சையாறு அணை 45.25 அடி, நம்பியாறு அணை 22.96, கொடுமுடியாறு அணை 25 அடி. மீண்டும் மழை: இந்நிலையில் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.