டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: எம்.எல்.ஏ உள்பட 41 பேர் கைது

களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் பள்ளி, கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதையடுத்து
Updated on
1 min read

களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் பள்ளி, கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜான்ஜேக்கப், களியக்காவிளை பேரூராட்சி கவுன்சிலர் சந்திரபாய் உள்பட 41 பேரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

படந்தாலுமூடு ஆலுமூடு சந்திப்பு பகுதியில் இரு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு கிறிஸ்தவ தேவாலயமும் உள்ளது. இவற்றின் அருகே டாஸ்மாக் கடை சனிக்கிழமை மாலையில் திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலுமூடு பகுதிக்கு வந்து அங்கு டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையோரம் நின்றிருந்தனர். அங்கு தக்கலை சரக துணை காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ், மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சங்கரேஸ்வரன் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து ஜான்ஜேக்கப் எம்எல்ஏ உள்ளிட்டோர் தக்கலை டி.எஸ்.பி.யிடம் பேசினர். இதற்கு டாஸ்மாக் கடை இங்கிருந்து மாற்றப்படும் என டிஎஸ்பி தெரிவித்தாராம். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சற்று தொலைவில் நின்றிருந்தனர். அப்போது டாஸ்மாக் கடை பணியாளர் மூலம் கடை திறக்கப்பட்டு, போலீஸாரின் பாதுகாப்புடன் மது விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து ஜான்ஜேக்கப் எம்.எல்.ஏ தலைமையில் பொதுமக்கள் சென்று கடையை மூடினர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸôர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர்.

இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய பாஜக மாநில இளைஞரணி செயலாளர் சி.எம். சஜூ, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ எஸ். ஜான்ஜேக்கப், முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ், களியக்காவிளை நகர காங்கிரஸ் தலைவர் ஏ. சுரேஷ், களியக்காவிளை பேரூராட்சி காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சந்திரபாய், கிள்ளியூர் தொகுதி சமக செயலாளர் கே. சந்தோஷ்குமார் உள்ளிட்ட 40  ஆண்கள், 1 பெண் உள்ளிட்ட 41 பேரை போலீஸôர் கைது செய்து களியக்காவிளை தனியார் திருமண மண்டபத்தில் சிறைவைத்தனர்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பின் போலீஸாரின் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறந்து செயல்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com