நெல்லையில் நகைப்பறிப்பு கொள்ளையர்கள் 2 பேர் கைது: 100 பவுன் தங்கநகைகள் பறிமுதல்
திருநெல்வேலியில் தொடர்ந்து நடைபெற்று வந்த நகைப்பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் நேரடிப் பார்வையில் தனிப்படை


திருநெல்வேலியில் நகைப்பறிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
திருநெல்வேலியில் தொடர்ந்து நடைபெற்று வந்த நகைப்பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் நேரடிப் பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர், சென்னை தாம்பரத்தில் உள்ள முத்தமிழ் நகர் 3 ஆவது தெருவைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சீனிவாசன் (21) என்பதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் இருந்து ரயில் மூலம் நெல்லைக்கு வந்து நகைப்பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரும், சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த துளசிதாஸ் மகன் அபிஷேக்கும் (30) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களது கூட்டாளியான சென்னை முகப்பேர் கிழக்கு எவரெஸ்ட் காலனியைச் சேர்ந்த பால்பிரபாகரன் மகன் எல்ராயன் (22) என்பவர் தலைமறைவாகிவிட்டார்.
இவர்கள் 3 பேரும் கடந்த மூன்று மாதங்களில் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 6 வழிப்பறி சம்பவங்களிலும், மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 3 வழிப்பறி சம்பவங்களிலும், பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 3 வழிப்பறி சம்பவங்களிலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 5 வழிப்பறி சம்பவங்களிலும், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 2 வழிப்பறி சம்பவங்களிலும், திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் ஒரு வழிப்பறி சம்பவத்திலும் என மொத்தம் 20 வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 100 பவுன் தங்கநகைகள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள எல்ராயனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொள்ளையர்களைப் பிடித்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி ஆணையர் மாணிக்கம், திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் லட்சுமிநாராயணன், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் ஜெயமுருகன், ஆனந், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மேகநாதன், ராஜன், மரியபிரான்சிஸ், தலைமை காவலர்கள் மைதீன், முத்துப்பாண்டி, கோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
பேட்டியின்போது மாநகர காவல் துணை ஆணையர் து.பெ.சுரேஷ்குமார் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...