தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில் சோழர்கால கல்வெட்டு கண்டெடுப்பு

சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களால் சோழர்கால கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வில் கணம்புல்ல

News image
Updated On :29 ஜூலை 2014, 12:40 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் இளமையாக்கினார் கோயிலில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களால் சோழர்கால கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வில் கணம்புல்ல நாயனாருக்கும், திருநீலகண்ட நாயனாருக்கும் முக்தி தந்த இறைவனுக்கு இவ்வாயலயத்தை சோழர்கள் கட்டியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் குறித்து தெரிவித்ததாவது:

தேவ கோட்ட துர்க்கை சிற்பத்தின் கீழ் உள்ள ஜகதிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு கல்வெட்டுகள் இரண்டாம் குலோத்துங்கள் (கிபி 1133-1150) காலத்தைச் சேர்ந்ததாகும். பூமருவிய புவியேழும் எனத் தொடங்கும் மெய்கீர்த்திக்கு உரியவனாவான். கல்வெட்டுகள் காலப்போக்கில் புனரமைப்பு பணிகளால் அழிந்த நிலையில் காணப்படுகிறது. கண்ணுக்கு புலனாகின்ற எழுத்துகளை கொண்டு பார்க்கு போது, கணநாதருக்கு அளிக்கப்பட்ட நிலதானம் என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் கணநாதர், நாயனமார்களில் ஒருவரான கணம்புல்ல நாயனாரை குறிக்கிறது. கணம்புல்ல நாயனார் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலதானத்தை இக்கல்வெட்டு அம்பலப்படுத்துகிறது. எவ்வளவு நிலம் தானமாக கொடுக்கப்பட்டது. எந்த ஆண்டு கொடுக்கப்பட்டு என்பதை கல்வெட்டு தேய்மானத்தால் அறிய முடியவில்லை.

கணம்புல்ல நாயனார்:

கணம்புல்ல நாயனார் தில்லையில் வாழ்ந்த நாயன்மார்களில் ஒருவராவார். சிவத்தொண்டு புரிந்து வந்த கணம்புல்லர் வறுமையில் தனது வீட்டையும் விற்று திருத்தொண்டு புரிந்து இறுதியில் புல்லை விற்று அதில் வரும் வருவாயைக் கொண்டு சிவத்தொண்டு செய்து வந்தார். அதனாலேயே கணம்புல்லர் என அழைக்கப்படலானார். நால்வர் பாடல் பெற்ற தலங்களையும், நாயன்மார்க்கு முக்தி தந்த ஆலயங்களையும் கற்றளியாக சோழர்கள் எடுப்பித்து சிறப்பு செய்துள்ளனர். அவ்வகையில் கணம்புல்ல நாயனாருக்கும், திருநீலகண்ட நாயனாருக்கும் முக்தி தந்த இறைவனுக்கு இவ்வாயலயத்தை சோழர்கள் கட்டியுள்ளனர்.

மெய்கீர்த்தி:

மெய்க்கீர்த்தி என்பது சாசனச் செய்யுள் ஆகும். இன்னும் விரிவாகச் சொல்வதானால் மன்னனின் குணநலன்களை, போர் வெற்றிகளை இலக்கண நயத்துடன் எதுகை, மோனையுடன் கூறும் கல்வெட்டு பாடல்களே மெய்கீர்த்தி எனலாம். பல்லவரும் பாண்டியர்களும் பின்பற்றியே இம்மெய்கீர்த்தி முறையே செழுமையாக்கியவர்கள் சோழர்கள். முதலாம் ராஜராஜன் இப்பணியை அறிமுகப்படுத்தியவனாவான்.

இரண்டாம் குலோத்துங்கள் கட்டிய கோயில்:

இக்கோயிலின் கருவறை மட்டுமே சோழர் வேலைப்பாடுடன் மிளிர்கிறது. கருவறை முக மண்டபம், சுற்றுக்கொயில்கள் நகரத்தாரின் பிற்காலத் திருப்பணியாகும். கருவறை தேவக்கோட்டை யாளி வரிசை, பூத கணங்கள், அதிட்டான அமைப்பு ஆகியவைகளைக் கொண்டு இக்கோயில் இரண்டாம் குலோத்துங்கள் கட்டியதே என காணமுடிகிறது. இதனை நிருபிக்கும் வகையில் கோயிலில் இரண்டாம் குலோத்துங்கள் காலத்து நுண்ணிய சடை அலங்காரம் கொண்ட துவாரபாலகர் சிற்பங்கள் சேதமடைந்த நிலையில் கோயிலின் தென்புறம் உள்ளதை காணலாம், அதுமட்டமல்லாமல் இரண்டாம் குலோத்துங்கனால் நிறுவப்பெற்ற நந்தி சிற்பம் தற்போது வழிபாடின்றி ஒரு மூலையில் கிடக்கிறது. இச்சிற்பத்தின் வேலைப்பாடுகளை உற்றுநோக்கும் போது இரண்டாம் குலோத்துங்கள் கால கலைப்படைப்பே என்பது உறுதியாகிறது.

இரண்டாம் குலோத்துங்கன் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர் இ.மணமாறன் தெரிவித்தது:

விக்கிர சோழனின் மைந்தனான இரண்டாம் குலோத்துங்கள் கிபி 1133 முதல் 1150 ஆண்டு வரை சோழ நாட்டை ஆட்சி செலுத்தியவன் ஆவான். இரண்டாம் குலோத்துங்கள் தில்லையிலேயே முடி சூட்டிக்கொண்டாம் என திருமாணிக்குழி கல்வெட்டு கூறுவதை நோக்கும் போது, இவன் தில்லை ஆடல்வல்லான் மீது கொண்ட பேரன்பு நமக்கு புலனாகும். இவனே தில்லையில் நாற்பெருந்தெருக்களை (நான்கு வீதிகள்) எடுத்து சிவகாமி அம்மன் கோயிலை விரிவாக்கி, சிவகங்கை தீர்த்து குளத்தை செப்பணியிட்டு மண்டபம் எடுத்த பெருமைக்குரியவன் ஆவான். இவன் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் இம்மன்னனை கிருமி கண்ட சோழன் என தூற்றும் அளவுக்கு வரலாற்றில் மோசமாக சித்தரிக்க வைத்தது.

திருமால் சிற்பத்தை இடம் பெயர்த்தவன்:

தில்லை திருக்கோயில் விரிவாக்கும் பணியை இரண்டாம் குலோத்துங்கள் மேற்கொள்ளும் போது, ஆடல் வல்லான் சந்நிதியை பெரிதாக்கும் நோக்கில் கிபி எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவன் நிறுவியிருந்து திருமால் சிற்பத்தை இடம் பெயர்த்தான். இதற்கு வைணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, திருமால் சிற்பத்தை கடலில் கொண்டு சேர்த்தான். இதனை இரண்டாம் குலோத்துங்களின் அவைக்களத்தில் இருந்த ஒட்டக்கூத்தர் திருமாலை அவருக்குரிய இருப்பிடமான பாற்கடலுக்கு அனுப்பினான் என்கிறார். திருநீற்றுச்சோழன் என்று சிறப்பிக்கப்பெற்ற இவன் வைணவர்களை வெறுத்தான் என்று சொல்வது தவறான கருத்தாகும். இவன் ஆட்சியின் போதுதான் பிற வைணவ தலங்களில் இவன் தலையீடு செய்வதில்லை. ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் வைணவ தலங்கள் அப்போதும் சிறந்திருந்தன என்பதிலிருந்து இந்த உண்மை புலப்படும். எனவே தில்லையில் நடந்த நிகழ்வு இரண்டாம் குலோத்துங்கனை வைணவற்கு பரம எதிரியாக்கிவிட்டது என்பதே உண்மையாகும் என இ.மணமாறன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.