திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த புதிய ரக (tg37a) நிலக்கடலை அறுவடைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், விஞ்ஞானி பங்கேற்று கைதிகளை உற்சாகப்படுத்தினார்.
விவசாய பின்னணி கொண்ட சிறைவாசிகளை சிறைகளில் உள்ள தோட்டங்களில் ஈடுபடுத்திடவும், தண்டனை குறைப்பு மற்றும் வருமான ஈட்டும் வகையாகவும் சிறைத்துறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதன்படி தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைத் துறை தலைவர் திரிபாதி, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் சேகர் பசு ஆகியோர் ஆலோசனையின் பேரில் tg37a என்னும் வீரியரக நிலக்கடலை விதை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வழங்கப்பட்டு மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறைத்தோட்டத்தில், 5 ஏக்கரில் பயிரிடப்பட்டது. அதன் அறுவடைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப் பணியைப் பார்வையிட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பப் பிரிவு மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியதாவது:
பாபா அணு ஆராய்சசி நிலையத்தின் கீழ் இதுவரை 42 வகையான வீரிய வகை விதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் tg37a வகை நிலக்கடலை உள்ளிட்ட 18 வகையான விதைகள் எண்ணெய்வித்துக்களாகும்.tg37a இந்த புதிய ரக நிலக்கடலை விதை 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட மாநிலங்களில் வேளாண்துறை, பல்கலைக்கழகங்கள் மூலம் இந்த ரகம் தோட்டங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை தோட்டத்திற்கு வழங்கப்பட்டது. 140 கிலோ விதைகள் 5 ஏக்கரில் 4 கட்டங்களாக விதைக்கப்பட்டது. 15-3-2014 அன்று விதைக்கப்பட்ட நிலக்கடலை 102 நாள்கள் கழித்து 26-6-2014 இல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலக்கடலை ரகம் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. விதை குருத்து அழுகல், வளைய தேமல் நோய் எதிர்ப்பு கொண்டதாகும். தோட்டங்களில் பயிரிடும்போது 100 நாள்களிலும், மானாவாரி நிலங்களில் பயிரிடும்போது 110 நாள்களிலும் அறுவடைக்குத் தயாராகிவிடும். இலேசான ரோஸ் நிறம் கொண்ட திறட்சியான கொட்டைகளை உடையது. 72 முதல் 75 சதவிகித கொட்டை தரக்கூடிய நிலக்கடலையாகும். 48 சதவிகிதம் எண்ணெய் திறனும், 23 சதவிகிதம் புரசச் சத்தும் இந்த நிலக்கடலைகளில் இருக்கும். மிகப்பெரிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் திட்டத்தின் மூலம் இந்த புதிய நிலக்கடலை விதைகளை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல முன்வந்தால், விதைகளைத் தயார் செய்து வழங்கலாம் என்றார் அவர்.
இதுகுறித்து வேளாண்மைத் துறையின் உதவி இயக்குநர் சி.மகாலிங்கம், வேளாண்மை அலுவலர் மாரியப்பன் ஆகியோர் கூறுகையில், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து இயற்கை சடுதி மாற்றம் என்னும் முறையின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த நிலக்கடலை விதையில் உருவான பயிர் நல்ல சாகுபடி கொடுத்துள்ளது. விதைநேர்த்தி, ஜிப்சம், உரம் இடுதல், பயிர்ப்பாதுகாப்பு போன்ற தொழில்நுட்பங்கள் வேளாண்துறையின் மூலம் சிறைக்கைதிகளுக்கு அளிக்கப்பட்டது. இம் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கடலை ரகங்களில் சராசரியாக ஹெக்டேருக்கு 2 முதல் 2.5 டன் வரக்கூடிய வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இன்த புதிய விதை ரகத்தால் ஹெக்டேருக்கு 5 மெட்ரிக் டன் மகசூல் கிடைத்துள்ளது. இந்த மகசூல் மூலம் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 2 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கனகராஜ் பேசுகையில், இந்தச் சிறைச்சாலைக் கைதிகளுக்கு இதுபோன்ற வேளாண் பயிற்சி மறுவாழ்வு அளிப்பதாகத் திகழும். கைதிகளும் மிகுந்த ஆர்வத்தோடு சாகுபடி பணியில் ஈடுபட்டு இப்போது மனம்நிறைந்த மகசூலை பெற்றுள்ளனர் என்றார். மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலைய ஊழியர் லோகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.