பழனி அரசு மருத்துவமனையில் பிடிபட்ட மலபார் அணில்
பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது வேட்டைத் தடுப்புப் பணியை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதால் தற்போது யானை, அணில், காட்டெருமை, மான்,


பழனி அரசு மருத்துவமனையில் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டிருந்த மலபார் அணிலை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்போது வேட்டைத் தடுப்புப் பணியை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதால் தற்போது யானை, அணில், காட்டெருமை, மான், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பெரிய அளவிலான அணில் ஒன்று மரத்துக்கு மரம் பறப்பது போன்று தாவிக்கொண்டிருந்தது. இதை வேடிக்கை பார்த்த சிலர் பிடிக்கவும் முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்த பழனி தீயணைப்புத்துறையினர் அலுவலர் மயில்ராஜூ தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று அணிலை பத்திரமாக மீட்டு வலையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அணிலை வனத்துறையினர் கொடைக்கானல் வனப்பகுதியிலேயே கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து பாரஸ்ட்டர் தாருகாவனன் கூறுகையில், பிடிபட்ட அணில் மலை அணில், மலபால் அணில் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் உடலமைப்பு பெரியதாகவும், கால்களில் நகங்கள் கூர்மையாகவும் இருக்கும். இதன் தோல் பெரியதாக இருக்கும் நிலையில் மரத்துக்கு மரம் தாவும் போது கால்களை விரிக்கும் போது கீழே இருந்து பார்ப்பவர்களுக்கு அணில் பறப்பது போல தோன்றுவதால் சிலர் இதை பறக்கும் அணில் என்று கூறுவர். பழனி நகருக்கு கொடைக்கானலில் இருந்து மரக்கட்டைகள், பழவகைகள் உள்ளிட்டவை லாரிகள் மூலம் வருகிறது. இதில் தவறுதலாக பயணித்த அணில் பழனிக்கு பழகுடோன்கள் அதிகமாக இருக்கும் அரசுமருத்துவமனை பக்கம் வந்த போது தப்பி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரத்தில் ஏறியிருக்கும் என தெரிவித்தார்.
பாம்புகள் நடனம்:
பழனி புதுநகரில் ரயில்வே கேட் அருகே அருள்மிகு செல்வவினாயகர் கோயிலின் பின்புறம் ரயில்வேக்கு சொந்தமான இடம் புதர்மண்டி கிடக்கிறது. இங்கு புதன்கிழமை காலை பெரிய அளவிலான கருப்பு சாரைப்பாம்பும், கோதுமை நாகமும் சுமார் அரைமணி நேரம் பின்னிப்பிணைந்து நடனமாடியுள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் மூன்றடி உயரம் வரை பின்னியவாறே எழுந்த பாம்புகளை ஏராளமான பொதுமக்கள் பார்த்து பரவசமடைந்தனர். கோயிலின் பின்பகுதியில் பவுர்ணமி துவங்கும் நிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பார்ப்பது அரிது எனக்கூறி மக்கள் பார்த்த போது பலரும் சத்தம் போடவே அவை பிரிந்து அருகே இருந்த புதரில் மறைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...