பாலாறு அணையிலிருந்து ஆறரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தாடாகுளம் வாய்க்கால் வீணானது
பழனி அருகே பாலாறு அணையில் இருந்து தாடாகுளம் செல்லும் வாய்க்காலுக்கு ஆறரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கால்வாய் தண்ணீர் செல்லாததால் பயனின்றி போனது. இதனால்


பழனி அருகே பாலாறு அணையில் இருந்து தாடாகுளம் செல்லும் வாய்க்காலுக்கு ஆறரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கால்வாய் தண்ணீர் செல்லாததால் பயனின்றி போனது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பழனி அருகே மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் அமையப்பெற்றது பாலாறு பொருந்தலாறு அணைக்கட்டு. இந்த அணை திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணையாகும். இந்த அணையில் சேகரமாகும் தண்ணீரால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவது மட்டுமன்றி பழனி நகரின் குடிநீர் தேவையும் பெருமளவு பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த அணையில் இருந்து ராஜவாய்க்கால், தாடாகுளம் உள்ளிட்ட பல்வேறு மதகுகள் மூலம் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு வெளியேற்றப்படுகிறது. கடந்த இரண்டு வருடமாக பருவமழை பொய்த்ததால் அணையில் தண்ணீர் பெருமளவு குறைந்து போனது. அப்போது தாடாகுளம் வாய்க்காலை பகுதியை சீரமைத்து விவசாயிகள் பலனடையும் வகையில் பாலாறு அணையில் இருந்து பாலசமுத்திரத்துக்கு சுமார் ஒன்றரை கி.மீ தூரத்துக்கு மண்பாதை அமைக்கப்பட்டது. இதற்காக சுமார் ஆறரை கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நடைபெற்ற இப்பணி மிகவும் தரமின்றி செய்யப்படுவதாக அப்போதே விவசாயிகள் புகார் செய்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவற்றை கண்டு கொள்ளாமல் பணிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சிலமாதம் முன்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பாலாறு பொருந்தலாறு அணை நிரம்பியதால் வியாழக்கிழமை உதவிப் பொறியாளர் வினோத்குமார் முன்னிலையில் இந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அணை திறக்கப்பட்ட நிலையில் மதகு வழியாக வந்த நீர் வாய்க்கால் வழியாக செல்லாமல் பல பகுதிகளில் தேங்கி நின்றது. மேலும், வெளியேறிய தண்ணீர் மீண்டும் மதகு வழியாக அணைக்கே திரும்பியது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதிலேதும் அளிக்காமல் அணைப்பகுதிக்கு சென்று தண்ணீரை அடைத்து விட்டு சென்றனர். இதுகுறித்து தாடாகுளம் பாசன விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்ததாவது, அணை கட்டப்பட்டபோது அமைக்கப்பட்டது தாடாகுளம் மதகு. இதன் மூலம் தண்ணீர் திறக்கப்படும் போது கட்டத்துரை ஓடை, கரமடை ஓடை, ஏழுமாமரம் ஓடை, புதுக்காட்டு ஓடை, பாலப்படுகை ஓடை, பூமரத்து ஓடை, செம்பரம் ஓடை, காளிவாய்க்கால் ஓடை, அன்னகம் ஓடை, அப்பாத்துரை ஓடை மற்றும் தோப்படி மடம் ஓடை ஆகிய ஓடைகளின் மதகு வழியாக சுமார் 840 ஏக்கர் நிலங்கள் இருபோகம் விளையும் வகையில் பாசன வசதி பெற்றது. இதன் பெருமைக்காகவே அணையின் கடைமடை பகுதியில் அருள்மிகு தாடாகுளம் அம்மன் கோயில் கட்டப்பட்டது.
இந்த மதகை சுமார் ஆறரை கோடி மதிப்பில் புதுப்பிப்பதாக கூறியபோது பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து எப்படி கட்டப்படுகிறது என கேட்டபோது விபரம் கூறவில்லை. கட்டும்போதும் வந்து பார்க்கவில்லை. தற்போது தாடாகுளம் வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் பகுதியில் இருபுறமும் கான்கிரீட் சாய்தளத்தை உயரமாக அமைத்ததால் தடுப்பணை போல ஆகிவிட்டது. இன்று தண்ணீர் திறந்து சோதனை செய்து பார்த்த போது தண்ணீர் சிறிது தூரம் கூட செல்லவில்லை. தண்ணீர் திரும்பி அணைக்கே செல்கிறது. 840 ஏக்கர் இருபோக பாசன வசதி தந்த வாய்க்காலால் வெறும் 90 ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெறும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளோம்.
கடந்த இரு வருடங்களாக விவசாயம் பொய்த்த நிலையில் தற்போது அணையில் சுமார் 65 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தின் மூலம் கட்டப்பட்ட சாலை, வாய்க்காலால் ஆறரை கோடி ரூபாய் வீணாகிவிட்டது. உடனடியாக எங்களுக்கு இதை சீரமைக்காவிட்டால் நகர்ப்பகுதிக்கு வந்து அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் மறியல் போராட்டம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி வரும் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...