நோக்கியோ நிறுவன தொழிலாளர்களுக்கு, மாற்று வேலை வழங்க வேண்டும்: கி.வெங்கட்ராமன்
மூடப்படவுள்ள நோக்கியோ நிறுவன தொழிலாளர்களுக்கு, மத்தியஅரசு மாற்று வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை


மூடப்படவுள்ள நோக்கியோ நிறுவன தொழிலாளர்களுக்கு, மத்தியஅரசு மாற்று வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நோக்கியோ நிறுவனத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் நவம்பர் 1, 2014 உடன் முடிவடைவதால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்த ஆலை முற்றிலும் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா கைபேசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2006 முதல் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளியல் மண்டலத்தில் கைப்பேசித் தொழிற்சாலையை தொடங்கி நடத்தி வந்தது. இந்நிறுவனத்திற்கு இந்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கின.
ரூ.620 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத் தொகையாக பின்லாந்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
ஆனால் இந்நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் மாத ஊதியம் கிடையாது. மேலும் இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது. நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த வரி ஏய்ப்பு வழக்கு காரணமாகவே ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை கையகப்படுத்தாமல் விட்டுவிட்டது. ஒப்பந்தத்திற்கு கைபேசி தயாரிக்கும் தொழிற்சாலையாக நோக்கியாவை வைத்திருந்தது. அந்த ஒப்பந்தமும் நவம்பர் 1ஆம் தேதியுடன் முடிவடைவதால். நோக்கியா ஆலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். மீதமுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவென்பது மிகப்பெரியக் கேள்விக் குறியாகிவிட்டது.“இந்தியாவில் தயாரியுங்கள் (Make In India)” என அழைக்கும் நரேந்திரமோடி அரசு இத்தொழிலாளர் பிரச்சனையில் தலையிட்டு, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோக்கியா ஆலையில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். நவம்பர் 1, 2014-லிருந்து குறைந்தது ஓராண்டிற்கு அத்தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கி மாற்று வேலைக்கு அவர்களை அமர்த்தும் பொறுப்பை மத்திய அரசு ஏற்கவேண்டும். அதற்கான தொகை முழுவதையும் நோக்கியா நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான ஆணையை இந்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு நோக்கியா நிறுவனம் பொறுப்பேற்று நிதி தர தவறினால் நோக்கியா நிறுவனத்தின் முதன்மை உரிமையாளர்களை தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவித்து இந்தியஅரசு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...