அய்யனாரை குடும்பத்துடன் வழிபடும் சோழமன்னர், அவரை வணங்கிய நிலையில் காணப்படும் சிற்பம் மற்றும் குதிரையில் பயணிக்க தயாராக இருக்கும் சோழ மன்னரது அரிய வகை சிற்பமும், கல்வெட்டுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சிற்ப அமைப்பு: கோயிலின் கருவறை முன்மண்டபத்தில் இடப்புற பக்கவாட்டுச்சுவரில் அறியப்படாத இச்சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பமானது 4 அடி நீளமும், 2.5 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பெற்றுள்ளது. சிற்பத்தில் சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு காலை உயர்த்தி, மற்றொரு காலை சற்றே தூக்கி பாயும் நிலையில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட ஆண் குதிரையில் அமர்ந்த நிலையில், கம்பீரத்துடன் கிரீடம் அணிந்த சோழ மன்னர் பவனி வர ஆயத்தமாவது போன்றும், அவனருகில் சோழ மாவீரன் ஒருவன் கொடியசைப்பது போன்றும் செதுக்கப்பெற்றுள்ளது.