ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சிதம்பரத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அபூர்வச்சிற்பம், கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

சிதம்பரத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அபூர்வச்சிற்பம் மற்றும் கல்வெட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2014, 5:54 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அபூர்வச்சிற்பம் மற்றும் கல்வெட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப்பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக இயக்குநர் இல.கணபதிமுருகன், தலைவர் ஆ.முத்துக்குட்டி ஆகியோர் கோயில் நிர்வாகி சண்முகம், குருக்கள் முத்துராஜாமணி தீட்சிதர் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் சிதம்பரம் காரிய பெருமாள் கோயில் தெருவில் உள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ள அய்யனார் கோயிலில் தொல்லியல் துறையில் இதுவரை கண்டறியப்படாத மூன்றாம் குலோத்துங்க சோழனின் அபூர்வச்சிற்பம் மற்றும் கல்வெட்டுக்களை கண்டறிந்துள்ளனர்.

மேலும் மூத்த கல்வெட்டு அறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலில் நடைபெற்ற கள ஆய்வில் பல அரிய உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்தது: சிதம்பரம் சைவத்தின் தலைநகரம் என்று சைவ அடியார்களால் போற்றப்படும் பெருமைக்குரியது. சிதம்பரத்தில் அரண்மனை அமைத்து ஆண்ட சோழர்கள் சைவசமயம் போன்ற பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மட்டுமின்றி சிறுதெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு, சிறிய கோயில்களையும் பராமரித்து வந்துள்ளனர்.

அய்யனாரை குடும்பத்துடன் வழிபடும் சோழமன்னர், அவரை வணங்கிய நிலையில் காணப்படும் சிற்பம் மற்றும் குதிரையில் பயணிக்க தயாராக இருக்கும் சோழ மன்னரது அரிய வகை சிற்பமும், கல்வெட்டுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சிற்ப அமைப்பு: கோயிலின் கருவறை முன்மண்டபத்தில் இடப்புற பக்கவாட்டுச்சுவரில் அறியப்படாத இச்சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பமானது 4 அடி நீளமும், 2.5 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பெற்றுள்ளது. சிற்பத்தில் சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு காலை உயர்த்தி, மற்றொரு காலை சற்றே தூக்கி பாயும் நிலையில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட ஆண் குதிரையில் அமர்ந்த நிலையில், கம்பீரத்துடன் கிரீடம் அணிந்த சோழ மன்னர் பவனி வர ஆயத்தமாவது போன்றும், அவனருகில் சோழ மாவீரன் ஒருவன் கொடியசைப்பது போன்றும் செதுக்கப்பெற்றுள்ளது.

சிற்பத்தில் வணங்கிய நிலையில் மூன்றாம் குலோத்துங்கனும், அவனுக்கு அருகில் வணங்கும் தோற்றத்தில் மூன்று பெண்கள் உருவமும் காணப்படுகிறது. மூன்று பெண்களில் இருவர் குலோத்துங்கனின் மனைவிகளான புவனமுழுதுடையாள் மற்றும் இளைய நம்பிராட்டி ஆவார்கள். மற்றொரு பெண் குலோத்துங்கனின் மகளாவார். சிற்பத் தொகுதியில் முதலாவதாக வணங்கிய நிலையில் காணப்படும் மற்றோரு நபர் என்றால், அரசருக்குரிய உடை அணிந்து குலோத்துங்கனுக்கு சமமாக காட்டப்பட்டிருக்கும் அம்மாவீரான் முதலாம் கோப்பெருஞ்சிங்கனாக கருதலாம். ஏனெனில் தனது மகளை காடவர் தலைவனான கோப்பெருஞ்சிங்கனுக்கு மணமுடித்து கொடுத்து காடவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார் முதலாம் குலோத்துங்கன். ஆகவே மனைவிமார், மகள், மருமகன் சகிதம் குடும்பத்துடன் இருப்பது போன்று இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கோப்பெருங்கின் சிதைந்த சிலை: கோயிலின் வெளிப்புறமுள்ள விநாயகர் சந்திதியின் அருகாமையில் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் சிதைந்த உருவச்சிலை ஒன்றும் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது.

இச்சிலையும் நடராஜர் கோயில் கிழக்கு கோபுர நுழைவாயிலின் வலப்புறம் வணங்கிய நிலையில் காணப்படும் கோப்பெருஞ்சிங்கன் சிலையும் பொருந்துவது மூலம் இதன் வாயிலாக மூன்றாம் குலோத்துங்கனுடன் வணங்கிய நிலையில் நிற்பது கோப்பெருஞ்சிங்கனே என உறுதிப்படுத்தலாம். அரிய வகை அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்: கோயிலில் கண்டறியப்பட்ட மற்றொமொரு அபூர்வச் சிற்பமான உமையொருபாகன் (அர்த்தநாரீஸ்வரர்) கோயிலின் தென்புற தேவக்கோட்டத்தில் உள்ளது.

பெண்ணிற்கும் சம உரிமை என்ற வாழ்வியல் உண்மையை உலகிற்கு உணர்த்தவே இத்தகைய அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தை தமிழர்களாக சிற்பமாக வடித்து வணங்கியுள்ளனர். அர்த்தநாரீஸ்வரர் செவிகளை வலப்புறம் மகர குண்டலமும், இடப்புறம் மகர குண்டலமும் அலங்கரிக்கின்றன. கழுத்தில் முத்துமாலை அணிந்தவாறு முப்புரிநூலுடன் திகழும் அம்மையப்பர் உருவம் சாளுக்கிய கலையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் மிளிர்கிறது. வலது முன்கை அம்மைக்கும், அப்பருக்கு ஆடை வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

 வலப்புறம் தோலாடையும், இடப்புறம் பட்டாடையும் அணிந்த சிற்பத்தின் பீடத்தில் நான்கு அடியவர்கள் வணங்கிய நிலையில் காணப்படுகின்றனர். கல்வெட்டு குறித்து கல்வெட்டு அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தது: கோயிலின் வடப்புற கோட்டத்தின் குமுதவரியில் கண்டறியப்பட்ட கல்வெட்டானது, திரிபுவனச் சக்கரவர்த்திகள் என குலோத்துங்க சோழனது மெய்க்கீர்த்தியுடன் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் கோயிலுக்கென்று பதினோராயிரம் காசுகளும் தானம் அளித்து, கோயிலுக்கென்று கிணறு எடுப்பித்து, நிலதானமும் வழங்கப் பெற்றதை குறிக்கிறது. திருச்சிற்றம்பலமுடைய தேவன் என்பான் இக்கல்வெட்டில் கையெழுத்து பொறித்துள்ளான். மதுரையும் ஈழமும் கொண்டு, முடித்தலை கொண்ட எனப்பலவாறு மூன்றாம் குலோத்துங்கனை கல்வெட்டு போற்றுகிறது. முடித்தலை கொண்ட பெருமாள் (பாண்டியனை வென்றதால்) என்ற பட்டப்பெரயர் குலோத்துங்கனுக்கே உரியதாகும்.

மூன்றாம் குலோத்துங்கனின் வேண்டுகோளுக்கினங்க அவனது அதிகாரியான திருச்சிற்றம்பலமுடைய தேவன் என்பவன் இத்திருகோயிலில் தானம் வழங்கியுள்ளதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன.  மேலும் இக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் இடக்கோடியில் புதிதாக கண்டறியப்பட்ட 18-19 நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அதில் சிதம்பரத்திலிருக்கும் ஸ்ரீஅகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகராகிய காரியபெருமாள் சுவாமி கோயிலும், அதன் கரை ஓரமிருக்கும் பல விருட்சங்களும், நந்தவனங்களும் கோயில் திருப்பணி கல்லாலான சொத்துக்களை எவரும் இம்சிக்காமலிருக்க வேண்டியது. அப்படி இச்சை கொண்டவர்கள் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவார்கள். பொன்னம்பல பரதேசியால் இந்த அறமெய்யப்பட்டது என கல்வெட்டு தெரிவிக்கிறது.

இதன் மூலம் கோயிலை சுற்றி சோழர் காலத்திலும், 45 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பெரிய அளவிலான நந்தவனம் இருந்துள்ளது. தில்லை நடராஜப் பெருமானுக்கு வழிபாடிற்கென நந்தவனமும், இலுப்பை எண்ணைய் தேவைக்காக இலுப்பை மரங்களும், கமுகு, பாக்கு மரங்களும் இவ்விடத்தில் இருந்துள்ளன என்பதை கல்வெட்டு உறுதிபடுத்துகிறது. சாளுக்கிய தூண்: கோயிலின் அருகாமையில் குடிநீர் குழாய் பணிக்காக பூமியை தோண்டிய போது சாளுக்கியர் கலைப்பாணியில் அமைந்த தூணின் சேதமடைந்த பகுதியினை குறிப்பிடலாம். நுண்ணிய வேலைப்பாடுகள் அமையப்பெற்ற இத்தூணில் பதஞ்சலி முனிவர் வணங்கிய நிலையில் காணப்படுகிறார். அவரது அருகாமையில் யாளி உருவங்களும், பூத கணங்களும் அழகு மிளிர பொறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் குலோத்துங்களின் எடுப்பித்த திருபுவனம் சரமேஸ்வரர் கோயிலிலும், சிதம்பரம் நடராஜர் கோில் எதிரம்பலத்திலும் (நடராஜருக்கு, காளிதேவிக்கு நடனப்போட்டி நடந்ததாக கூறப்படும் தேர் வடிவ மண்டபம்) இதே வேலைப்பாடு அமைந்த தூணைக் காணலாம். வரலாற்று முக்கியத்துவம் பெறும் கோயில்: சோழர்கள், சிவனுக்கு எண்ணற்ற கற்கோயில்களை கட்டியிருந்தாலும், அய்யனாருக்கென்று எடுப்பித்த கற்கோயிலாக திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் உள்ள அய்யனார் கோயில் மட்டுமே என இதுவரை இருந்து வந்தது.

அந்த வரிசையில் இனி சிதம்பரம் காரியபெருமாள் கோயிலும் திகழும் என்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஊரின் காவல் தெய்வமான இந்த அய்யனார் திருக்கோயில் கோபுரக்கலசத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். அன்றிலிருந்து ஆதரவின்றி அய்யனார் தனித்து விடப்பட்டுள்ளார். தில்லை நடராஜப் பெருமானுக்கு மலர் தந்த பெருமைக்குரிய இக்கோயில் குடமுழுக்கினை எதிர்நோக்கி காத்துள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.