மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 33 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.
இதனால் தாமிரவருணியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் கரையோரக் குடியிருப்புகள், குடிநீர் திட்டங்களை சேதமடைந்தன. அருவிகளிலும் கடும் வெள்ளம் நீடிப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும், பிற பகுதியிலும் பருவ மழை நீடித்து வருகிறது. மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இம்மாவட்டத்தில் உள்ள 12 அணைகளும் நிரம்பி வழிகிறது. மானாவாரி, நீர்வரத்துக் குளங்களும் நிரம்பி மறுகால் செல்கிறது.
அணைகள் நிரம்பிய நிலையில் தாமிரவருணி, கருணை ஆறு, ராமநதி, நம்பியாறு, பச்சையாறுகளில் உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நிகழ் வடகிழக்குப் பருவத்தில் வழகத்தை விட 94 சதவீதம் கூடுதலாக பெய்த மழையால் மணிமுத்தாறு அணை முன்கூட்டியே நிரம்பியது.
அணையில் வியாழக்கிழமை 6800 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. மாலையில் நீர்வரத்து குறைந்ததால் 4000 ஆயிரம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் அணைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென விநாடிக்கு 18000 கனஅடி நீர்வரத்து இருந்தது.
இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 18600 கனஅடியும் தாமிரவருணி ஆற்றில் திறக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 15000 கனஅடி திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.
கரையோரத்தில் உள்ள குடியிருப்புகள், ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், வெள்ளங்குளி, சேரன்மகாதேவி, நடுக்கல்லூர் உள்ளிட்ட பகுதியில் தாமிரவருணி கரையோரமாக உள்ள கோயில் மண்டபங்களை மூழ்கி வெள்ளநீர் சென்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டங்களும் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது.
பாபநாசம் அகஸ்தியர் அருவி, கல்யாணதீர்த்தஅருவி, மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் நீடிப்பதால் குளிக்க அனுமதியில்லை. அருவிகள், அணைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு்ள்ளது.