மேகி நூடுல்ஸ்க்குத் தடை, அஜின மோட்டோக்கு அனுமதி: தமிழ்த் தேசியப் பேரியக்கம் குற்றச்சாட்டு
ஒரு பக்கம் தடை இருந்தாலும், மற்ரொரு பக்கம் ஆபத்தான பொருள் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய பேரியக்கம் குற்றம் சாட்டியுள்ளது.


ஒரு பக்கம் தடை இருந்தாலும், மற்ரொரு பக்கம் ஆபத்தான பொருள் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய பேரியக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அப்பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்திரபிரதேசம், ஜார்கண்ட், தில்லி என பல்வேறு மாநில அரசுகளும், இந்தியாவின் படைத்துறையும் தடை செய்த பிறகு கடைசியில் தமிழக அரசும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இத்தடைக்கான காரணம் மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக ஈயமும், மோனோ சோடியம் குளூடானேட் என்ற அமினோ அமில உப்பும் இருந்ததுதான்.
இந்த மோனோ சோடியம் குளூடானேட் இயற்கையில் உருளைக் கிழங்கிலும் சில கடல் உணவுகளிலும் இருக்கின்றது. ஆனால் மோனோ சோடியம் குளூடானேட்டை செயற்கையாகத் தயாரிக்கும் போது அதனுடைய வேதிக் கட்டமைப்பு மாறிவிடுவதால் அது ஆபத்தான பொருளாகிறது. எப்போதோ மிகச்சிறிய அளவில் இதனை உட்கொண்டால் பெரிய தீங்கு ஏற்படுவதில்லை. மனித உடலே அதனை சரி செய்து கொள்கிறது.
ஆனால் தொடர்ந்து உண்ணுகிற போதும், அளவுக் கூடுதலாக உண்ணுகிற போதும் இதயத் துடிப்பு அதிகரிப்பு, முக இறுக்கம், தலைவலி, செரிமானக் கோளாறு போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. சிலருக்குக் கண்பார்வை போய்விடுகிறது. மேகி நூடுல்சில் மோனோ சோடியம் குளூடானேட் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி இருந்ததால்தான் தடைசெய்யப்பட்டது.
ஆனால் இதே மோனோ சோடியம் குளூடானேட் ஒரு ஜப்பானிய நிறுவனத்தால் அஜின மோட்டோ என்ற வணிக முத்திரைப் பெயரால் தயாரித்து விற்கப்படுகிறது. மோனோ சோடியம் குளூடானேட் இருக்கிறது என்பதால் 2015 ஜூன் 4 ஆம் தேதி மேகி நூடுல்ஸ்க்கு தடை விதித்த தமிழக அரசு அடுத்த நாள் ஜூன் 5 அன்று சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்து வரும் ஒன் ஹப் என்ற தொழிலக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் அஜின மோட்டோ தொழிற்சாலை நிறுவ நிலம் வழங்கி, அனுமதியும் வழங்கியுள்ளது.
பெப்சி, கொக்கோ கோலா, கெண்ட்டகி சிக்கன் உள்ளிட்ட பல உணவு பொருள்களில் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் கலக்கப்படுவது தொடந்து வெளிப்படுத்தப்பட்டாலும் அவை எந்தத் தடையுமின்றி தங்கள் வணிகத்தைத் தொடர்கின்றன. ஆட்டுக்கறி சுவையை செயற்கையாகத் தந்து கால ஓட்டத்தில் கூடுதலாக உணவு உண்ணும் வேட்கையை அதிகப்படுத்துவதால் பல உணவகங்கள் தொடக்கத்தில் அஜின மோட்டோ என்ற பெயரில் விற்கப்படும் மோனோ சோடியம் குளூடானேட்டை அதிகம் பயன்படுத்தின.
ஆனால் சில காலங்களிலேயே மக்கள் அதன் தீய விளைவுகளை உணரத் தொடங்கியதால் இப்போதெல்லாம் பல பெரிய உணவகங்களில் ”எங்கள் தயாரிப்புகளில் அஜின மோட்டோ சேர்க்கப்படுவதில்லை” எனக் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயினும் அரசாங்கம் இதற்குத் தடையேதும் விதிக்கவில்லை. பெருத்த ஆரவாரத்தோடு இந்திய அரசு 2006ல் பிறப்பித்து 2011 ஆகஸ்ட்டில் செயலுக்கு கொண்டுவந்த உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் உடலுக்கு கேடு விளைவிக்கும் இப்பெருநிறுவனத் தயாரிப்புகளைத் தடை செய்யவில்லை.ஏனெனில் இச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பெரு நிறுவனங்களைப் பாதுகாத்து, சிறு உணவகங்களையும், மரபான உணவுப் பொருள் தயாரிப்பாளர்களையும் சந்தையிலிருந்து விரட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் உள் அமைப்புகளான ஆய்வுக் குழுக்களில் கோக், பெப்சி, ஐடிசி, கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளே இடம் பெற்றுள்ளன.இன்னும் கூறுவதானால் இச்சட்டத்தை உருவாக்கியதே இந்திய உணவுத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்களின் சங்கமான இந்திய உணவு வணிகம் மற்றும் உணவுத் தொழில் கூட்டமைப்புதான். மேகி நூடுல்ஸ் தடை என்பது ஏதோ தற்செயலாக ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டதால் வந்துள்ள தடையே தவிர அரசாங்கத்தின் கொள்கை நடைமுறை மக்கள் நலப் பாதுகாப்புக்கானதாக இல்லை.
மேகி நூடுல்ஸ் மட்டும் இன்றி குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் சாக்லேட், கெண்டகி சிக்கன் உள்ளிட்ட அனைத்து உணவு பொருள்களையும் தற்சார்பான ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்து அவற்றின் மீது இந்திய தமிழக அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அஜின மோட்டோ நிறுவனத்திற்கு வழங்கியுள்ள இசைவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...