ஆம்னி பேருந்தில் சிக்கி கால் பாதிக்கப்பட்டவருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் ரூ.9.06 லட்சம் இழப்பீடு வழங்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஆனந்தகுமார் (எ) குமார் (37). இவர் ஆட்டோ ஓட்டநர் மற்றும் கிளினராக வேலை செய்து வந்தார். 23.1.12-ம் தேதி தென்காசியில் உள்ள ஒரு வாகனங்கள் சுத்தம் செய்யும் இடத்தின் வாசல் அருகே ஆனந்தகுமார் (எ) குமார் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது சென்னை மாடப்பாக்கம், பி.பி.கோவில் தெருவைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்தை, சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பின்னால் எடுத்துள்ளார். அப்போது வாசல் அருகே நின்று கொண்டிருந்த ஆனந்தகுமார் (எ) குமார் காலில் பேருந்தின் டயர் ஏறியுள்ளது. இதில் காயமுற்ற அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் 20.2.12-ம் தேதி வரை இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். விபத்தில் இவரின் ஒரு கால் எடுக்கப்பட்டுவிட்டது.
இதனையடுத்து ஆனந்தகுமார் (எ) குமார், இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், மதுரை ஐசிஐசிஐ லம்போர்டு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, குமாருக்கு ரூ.9.06 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.