அரசுப் பேருந்தில் சிக்கி உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.9,51, 110 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம், புதுப்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (49). இவர் 19.10.12-ம் தேதி சுந்தரபாண்டியம் பேருந்து நிலையத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்துள்ளார். ஓட்டுநர் குன்னூர் முத்தையா, இதனை அறியாமல் அஜாக்கிரதையாக பேருந்தை நகர்த்தி சென்றுள்ளார். இதில் பேருந்து சுந்தர்ராஜ் மீது ஏறி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து பலியானவரின் மனைவி வீரலட்சுமி (45), இவர்களின் மகள் முருகேஸ்வரி (22) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம், உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.9,51,110 வழங்க உத்தரவிட்டார்.