பழனி பகுதியில் நெல் கொள்முதல் மையம் திறக்க கோரிக்கை
பழனி பகுதியில் சிறப்பாக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும் போதிய விலை இல்லாததால் தமிழக அரசு நெல்கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


பழனி பகுதியில் சிறப்பாக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும் போதிய விலை இல்லாததால் தமிழக அரசு நெல்கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழனி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை பொய்த்திருந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அணைகள், குளங்கள் நிரம்பின. இதைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல், சோளம், கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்சாகுபடியை துவக்கினர். பழனி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சுமார் நாற்பதாயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. வேளாண்துறையும் ஒற்றைநெல் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு வகையான நடவுமுறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து நெல் சாகுபடியை ஊக்குவித்தனர். இதன் விளைவாக காணும் இடமெல்லாம் நெல்பயிரிடப்பட்டது. தற்போது முக்கால்வாசி நிலங்களில் நெல் விளைந்ததைத் தொடர்ந்து அறுவடை துவங்கியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் அறுவடைப்பணி நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களிலும் அறுவடை நடைபெற்று வருவதால் இயந்திரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறை பொறியியல் பிரிவு அறுவடை இயந்திரங்களுக்கு குறைந்த வாடகை உள்ள நிலையில் வேறுமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது விவசாயிகள் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1,500 ரூபாய் வரை கொடுக்கும் நிலை உள்ளது.
வயலில் அறுவடை செய்த நெல்லை டிராக்டர் மூலம் ஒரிடத்தில் குவித்து மூட்டைகளில் கட்டி வியாபாரிகளிடம் விற்கும் போது நூறுகிலோ மூட்டை குறைந்த பட்சமாக ரூ.2,100 ரூபாய் வரையே விற்பனையாகிறது. நல்லதரமான கர்நாடக பொன்னி சன்னரகமே இந்த விலைக்குதான் வியாபாரிகள் வாங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆயக்குடி பகுதிகளில் கல்ச்சர் பொன்னி போன்ற அரிசி ரகங்கள் ரூ.1,800 முதல் 1,950 வரை வியாபாரிகள் வாங்குகின்றனர். இதுகுறித்து வரதமாநதி பகுதியை சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமி கூறுகையில், மழைபெய்த பின் நெல் நட்டபிறகு யூரியா போன்ற உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதிகவிலை கொடுத்து உரம் வாங்கினோம். பின்னர் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் அதிக கூலி கொடுத்து ஆட்களை வேலைக்கு வைத்து களை எடுத்தல் போன்ற பணிகள் செய்தோம்.
பூச்சிகள் தாக்குதலில் இருந்து செடியை காப்பாற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளும் உரக்கடைக்காரர்கள் சொல்லும் விலைக்கு வாங்க வேண்டியிருந்தது. இவ்வளவு செய்தும் கடையில் அறுவடை செய்த பின் வியாபாரிகள் வாங்கும் விலை மிகவும் குறைவாக உள்ளது. சுமார் ஆறுமாத காலம் உழைத்து சிலஆயிரம் ரூபாயே இலாபம் கிடைக்கிறது என்றார். இந்த காரணத்தாலேயே விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வமின்றி உள்ளதாக தெரிவித்தார். பழைய ஆயக்குடியை சேர்ந்த மற்றொரு விவசாயியான முத்து கூறுகையில், கடந்த காலங்களில் தமிழக அரசே நெல்கொள்முதல் மையங்களை திறந்து விவசாயிகளிடம் கட்டுப்படியான விலை கொடுத்து நெல்லை வாங்கியது.
ஆனால் தற்போது அறுவடை ஆரம்பித்து பலநாட்களாகியும் ஆயக்குடி, பாலசமுத்திரம் உள்ளிட்ட எந்த பகுதியிலும் அரசு நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகளிடமே அவர்கள் சொல்லும் விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வசதியான விவசாயிகள் கிடங்குகளில் நெல்லை இருப்பு வைத்து நல்லவிலை கிடைக்கும் போது விற்கும் நிலையில் சிறு,குறு விவசாயிகள் வந்த விலைக்கு நெல்லையும், வைக்கோலையும் விற்று செல்கின்றனர். ஆகவே, மீதமுள்ள விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தமிழக அரசு நெல்கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...