பழனி சுற்று பகுதியில் முருங்கை விளைச்சல் அமோகம்: விலை சரிவு
தமிழகத்தில் காய்கறி சாகுபடியில் முருங்கை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சாம்பாரில் ருசியை அதிகரிக்க பயன்படும் முருங்கைக்காய் முக்கிய விழாக்களின் போதும், உணவு விடுதிகளிலும் தவறாமல்


பழனியை சுற்றியுள்ள பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை சரிந்துள்ளது.
தமிழகத்தில் காய்கறி சாகுபடியில் முருங்கை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சாம்பாரில் ருசியை அதிகரிக்க பயன்படும் முருங்கைக்காய் முக்கிய விழாக்களின் போதும், உணவு விடுதிகளிலும் தவறாமல் இடம் பிடித்து விடுவது வழக்கம். முருங்கை இலை, முருங்கைப் பூ போன்றவை நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுவதால் இதை விவசாயிகள் பலரும் விரும்பி சாகுபடி செய்கின்றனர். பழனியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ள நிலையில் தொப்பம்பட்டி, பொருளூர், வயலூர், தாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருங்கை விளைச்சல் மிகவும் குறைந்த நிலையில் முருங்கைக்காய் கிலோ ரூபாய் 150வரை விற்பனையானது. ஒரு கிலோவுக்கு சுமார் எட்டு காய்களை நின்ற நிலையில் ஒரு முருங்கையின் விலை ரூ.20 வரை விலைக்கு விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு முருங்கையின் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முருங்கையில் செடி முருங்கை, மர முருங்கை, கரும்பு முருங்கை என மூன்று ரகங்கள் சந்தைக்கு வருகின்றது. இதில் செடி முருங்கை கிலோ ரூ.15க்கும், கரும்பு முருங்கை கிலோ ரூ.21க்கும், மரமுருங்கை கிலோ ரூ.12க்கும் விவசாயிகளிடம் பெறப்படுகிறது. இவை மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டு பனை ஓலைகளில் நீளவாக்கில் அடுக்கப்பட்டு சணல் சாக்கால் கட்டப்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது. இவை அங்கிருந்து தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளம், கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி கிட்டுச்சாமி கூறுகையில், கடந்த சிலமாதம் முன்பு எதிர்பாராத விலைக்கு முருங்கை விற்றது. அப்போது வரத்து இல்லை. ஆனால் தற்போது வரத்து இருந்தும் விலை இல்லை. மழை எதிர்பார்த்த அளவு இல்லை. கிணற்று பாசனத்தை வைத்தே முருங்கை செடி வளர்க்கிறோம். களை எடுத்து, மருந்து வைத்து செடியை காப்பாற்றி மரமாக்கி கண்ணும், கருத்துமாக பார்த்து வளர்க்கும் நிலையில் சிறுதேனும் விலை கூடுதலாக கிடைத்தால் பாடுபடும் எங்களுக்கு விவசாயத்தின் மீதான நம்பிக்கை மறையாமல் இருக்கும் என்றார். இதே போல தக்காளிக்கும் விலை இல்லாததால் பலரும் தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விடும் நிலை நீடித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...