தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மத்திய அரசின் மானியத்தைப் பெறத் தவறியதால் ரூ.21.5 கோடி கூடுதல் நிதிச்சுமை - சிஏஜி அறிக்கையில் கண்டுபிடிப்பு

பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறையின் கீழ் மத்திய அரசின் மானியத்தைப் பெறத் தவறியதால் புதுவை அரசுக்கு ரூ.21.51 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :15 மே 2015, 10:28 am

சுஜித்குமார்

பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறையின் கீழ் மத்திய அரசின் மானியத்தைப் பெறத் தவறியதால் புதுவை அரசுக்கு ரூ.21.51 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிகளவில் உள்ளூர் கொள்முதலை ஊக்கப்படுத்தவும், அதன்மூலம் உள்ளூர் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நன்மைகளை தரவும், போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும், 1997-98-ம் ஆண்டில் மத்திய அரசு பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறையை அறிமுகம் செய்தது.

இதன்படி மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்ப நெல், அரிசி மற்றும் கட்டாயக் கொள்முதல் முறையில் வாங்கப்பட்ட அரிசியை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இதற்காகும் முழுச் செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. இவ்வாறாக கொள்முதல் செய்யப்பட்ட அரிசியின் அளவு பொதுவிநியோகத் தேவைக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த அளவை விட குறைவாக இருந்தால், பற்றாக்குறையை மத்திய சேமிப்பில் இருந்து ஈடுகட்டலாம். பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறையை பின்பற்றுமாறு புதுவை மாநில அரசை கடந்த 2011 ஜனவரியில் மத்திய அரசு கோரியது.

ஆனால் இதை புதுவை அரசு அறிமுகப்படுத்தவில்லை. 2014 ஜூனில் தான் புதுவை மாநிலத்தை பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறையை பின்பற்றும் மாநிலமாக அறிவிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசை அணுகியது. பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறை அறிமுகம் செய்யப்படாததால் கீழ்கண்ட விளைவுகள் ஏற்பட்டன.

வெளிச்சந்தையில் இருந்து ஒற்றை அவியல் அரிசியை கொள்முதல் செய்து புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ வழங்க மாநில அரசு 2012 ஜூலையில் முடிவு செய்தது. இதை 2013 நவம்பரில் அமுல்படுத்தியது.

பரவலாக்கப்பட்ட கொள்முதல் முறையை பின்பற்றும் மாநிலமாக அறிவிக்கும் கருத்துரு இதுவரை ஏற்றுக் கொள்ளாத நிலையில் நவம்பர் 2013 முதல் மார்ச் 2014  வரையிலான காலத்தில் ரூ.39.10 கோடிக்கு 14,871.73 மெட்ரிக் டன் ஒற்றை அவியில் அரிசியை வெளிóசந்தையில் மாநில அரசு கொள்முதல் செய்தது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி 2011 ஜனவரியிலேயே மாநில அரசு இம்முடிவை செயல்படுத்தி இருந்தால் ஒற்றை அவியல் அரிசியை கொள்முதல் செய்வதற்கான செலவை மத்திய அரசின் உதவியோடு ஈடுகட்டுவதின் மூலம் ஏறத்தாழ ரூ.23.94 கோடி சேமித்திருக்கலாம். ஏழை குடும்பங்களுக்கு குறைக்கப்பட்ட விலையில் உணவு தானியங்களை வழங்குவதே பொதுவிநியோக முறையின் நோக்கமாகும்.

வெளிச்சந்தையில் ஒற்றை அவியல் அரிசியை கொள்முதல் செய்யும் முறையின் கீழ் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் அட்டைதாரர்களிடம் நவம்பர் 2013 முதல் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது. இதநால் நவம்பர் 2013 முதல் மார்ச் 2014 வரை ரூ.21.51 கோடி வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது என சிஏஜி தணிக்கையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.