/

மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை:  உறவினர்கள் சாலை மறியல்

மாதனூர் அருகே பாலூரில் பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் புதன்கிழமை மறியல்

News image
Updated On :27 மே 2015, 10:48 am

எம். அருண்குமார்

மாதனூர் அருகே பாலூரில் பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதனூர் அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்க கவுண்டர் மகன் பாமக முன்னாள் மாதனூர் ஒன்றிய செயலர் சின்னபையன் (45).பாலூரில் இவர் விவசாயம் செய்து வந்தார்.  மேலும் அங்கேயே கோழிப்பண்ணையும் நடத்தி வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு தன்னுடைய நிலத்துக்கு சென்ற சின்னபையன் வீடு திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ள அவரது குடும்பத்தினர் முயற்சி செய்தனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மாதனூர் ஒடுக்கத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பாலத்தின் அருகே உடலில் காயங்களுடன் ஒரு நபரின் சடலம் இருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் புதன்கிழமை காலையில் பார்த்துள்ளனர்.  இதுகுறித்து பாலூரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது சின்னபையன் என்பது தெரியவந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்த பாலூர் கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை அவரது சடலத்தை எடுக்கக் கூடாது என அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.

ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன், ஆம்பூர் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.   கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து சின்னபையன் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தகவல் அறிந்த உடன் வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன், வேலூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் போலீஸ் மோப்ப நாய் சிம்பா அங்கு வரவழைக்கப்பட்டது.  

செவ்வாய்க்கிழமை இரவு சின்னபையன் வீட்டில் இருந்த போது யாரோ ஒரு நபர் அவரை வந்து அழைத்து சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  அந்த நபரை பிடித்து விசாரித்தால் கொலை செய்தது யார் என்ற தகவல் கிடைக்கலாம் என தெரிகிறது. ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.