டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மம்சாபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோய்: மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம்-காந்திநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சித்

News image
Updated On :31 மே 2015, 10:03 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம்-காந்திநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உடனடி நடவடிக்கை எடுத்து மருத்துவக் குழுவை அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மம்சாபுரம்-காந்திநகர், ஒத்தப்பட்டி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அம்மை நோய் கண்டிருந்தது. இந் நோய் மிக விரைவாக பரவி வந்த நிலையில், மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து கிராமத்திற்குள் வந்த எந்தவித நோய் தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது.

நோய் தாக்கம் அதிகமாக இருப்பது குறித்தும், மருத்துவர்கள் யாரும் கிராமத்தில் வந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமனின் கவனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.இதனையடுத்து அவர், சிவகாசி சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் கலு சிவலிங்கத்திடம் உடனடியாக தொடர்பு கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். அவர் அங்கிருந்து சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரனிடம் இது குறித்து கேட்டபோது, யாரும் பாதிக்கப்படவில்லை என்று தகவல் கொடுத்துள்ளார். இருந்தபோதிலும், துணை இயக்குநர் நேரடியாக குறிப்பிட்ட கிராமத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்தார்.

அங்கு வீடு தவறாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களும், நோயிலிருந்து சுகம் அடைந்தவர்களும் இருந்தார்கள். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்தவர் கலா, சுகாதார ஆய்வாளர் மற்றும் செவிலியர் ஆகியோரை வரவழைத்து, இதுபோன்ற தவறான தகவல்களைத் தரக்கூடாது. செவிலியர்கள் கிராமத்தினுள் சென்று கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து வீடுகள் தோறும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் இரு நாட்களுக்கு கிராமங்களில் முகாமிட்டு நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

பொதுமக்கள் புகார்: மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், பணிக்கு யாரும் சரிவர வருவது கிடையாது என்றும், நோயாளிகளை அலட்சியப்படுத்தி, அலைக்கழிப்பதாயும் துணை இயக்குநரிடம் பொது மக்கள் புகார் கூறினர். விசாரித்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.