சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வழக்குரைஞர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: மாவட்ட நீதிபதி

வழக்குரைஞர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலின் உத்தரவுப்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள

News image
Updated On :30 ஜூன் 2016, 1:40 pm

கோ.ஜெயக்குமார்

வழக்குரைஞர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலின் உத்தரவுப்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

2016-ம் ஆண்டு ஜூன் 16-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முழு அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது 1961-ம் ஆண்டைய வழக்குரைஞர்கள் சட்டத்தின் 34(1) பிரிவின் படி கொண்டுவரப்பட்டு 25.5.16-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட விதிகள் தொடர்பாக வழக்குரைஞர்கள் சங்கங்கள் மற்றும் வழக்குரைஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கிணங்க வழக்குரைஞர்கள் சட்டப் பிரிவு 34(1)-ன் கீழ் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டது என்றும் இந்த விதிகள், வழக்குரைஞர்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதற்கோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்காகவோ ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும், இந்த விதிகள் நீதிமன்றத்தினுடைய மான்பைக் காக்கவும், நீதி பரிபாலனம் முறையாக நடப்பதற்கு இடையூறாக உள்ள வழக்குரைஞர்களை அந்த குறிப்பிட்ட நீதிமன்றத்திலோ அல்லது பிற நீதிமன்றங்களிலோ வாதிடுவதிலிருந்து தவிர்க்கும் முகமாக ஏற்படுத்தப்பட்டன என்பது கருத்தில் கொள்ளப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில், இது போன்ற விதிகள், தீர்ப்பு வந்த நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் உருவாக்கப்படவேண்டும் என்று எல்லா உயர்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டது. இந்தப் பிரிவுப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய விதிகள் உருவாக்கப்படவில்லை என்றும், உடனடியாக விதிகள் உருவாக்கப்படவேண்டும் என்று உத்தரவிட ஒரு நீதிப்பேராணை மனு மூலமாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விதிகளை உருவாக்க நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சபை, சென்னை உயர்நீதிமன்றத்தைச் சார்ந்து இயங்கும் அனைத்து வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு கலந்து தீர ஆலோசித்து வரைவு விதிகளை உருவாக்கி அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து வழக்குரைஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஒப்புதலோடு அதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. தலைமை நீதிபதி அந்த வரைவை அனைத்து நீதிமன்றங்களின் பார்வைக்கு வைத்து, பின்னர் நடைபெற்ற அனைத்து நீதிபதிகளின் முழு அமர்வில் பரிசீலிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் பின்னர் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 25.5.2016-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

அரசிதழில் இந்த விதிகள் வெளியிடப்பட்ட பின்னர், சில வழக்குரைஞர்கள் சங்கங்களும், வழக்குரைஞர்களும் அந்த விதிகளில் குறைபாடுள்ள சில ஷரத்துக்கள் குறித்து தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். வழக்குரைஞர்களின் சங்கப் பிரதிநிதிகள் தலைமை நீதிபதியைச் சந்தித்தப்போது, தலைமை நீதிபதி அவர்களுடைய குறைகளை எழுத்து வடிவில் கொடுக்குமாறும், அவற்றை மீண்டும் விதிகள் குழுவிற்கு அனுப்பி பரிசீலனை செய்து தக்க மாற்றங்களை உருவாக்கலாம் என்று எடு்ததுக்கூறிய பிறகும் சில வழக்குரைஞர்களின் சங்கங்களின் இந்த விதிகள் தொடர்பாக தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து எழுப்பியதையடுத்து தலைமை நீதிபதி இந்த விதிகளின் வரைவு முடியும் வரை நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளமாட்டோம் என்று உறுதியளித்தார். அதற்குப் பின்பு 16.6.2016-ல் இது குறித்து நீதிபதிகளின் முழு அமர்வில் ஆலோசிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே தலைமை நீதிபதி அளித்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்வதோடு, தற்போது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படமாட்டாது என்றும், ஆனால் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளுக்குத் திரும்பவேண்டுமென்றும், அப்படி திரும்பாமால் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முழு அமர்வில் எடுக்கப்பட்ட முடிவு ஏற்கனவே வழக்குரைஞர்கள் சபைத் தலைவர் மூலமாக வழக்குரைஞர்களுக்கும், அவர்களது சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு நீதிபதிகளின் முழு அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுக்கிணங்க விதிகள் குழு மாற்றியமைக்கப்பட்டு, தற்போது ஐந்து நீதிபதிகளைக் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

வழக்குரைஞர்களின் சங்கங்களும், வழக்குரைஞர்களும் இரு வார காலத்திற்குள் தங்களது கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளதற்கிணங்க, ஒரு சில வழக்குரைஞர்களின் சங்கங்களும், ஒரு சில வழக்குரைஞர்களும் எழுத்து மூலமாக தங்களது கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். ஆனால் சில வழக்குரைஞர்களின் சங்கங்கள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கும் சூழல் இருப்பதால், வழக்குரைஞர்களின் சங்கங்களும், வழக்குரைஞர்களும் நீதிமன்றப் புறக்கணிப்பை தவிர்த்து நீதிமன்றப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என அவர் செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.