புதுச்சேரி, சிக்கிம் மாநிலங்களில் சரக்கு மற்று சேவை வரி இணையதள சேவை நாளை தொடக்கம்: நவீன்குமார்
புதுச்சேரி, சிக்கிம் மாநிலங்களில் முதற்கட்டமாக சரக்கு மற்றும் சேவை வரி இணையதளம் செவ்வாய்க்கிழமை (8.11.16) தொடங்கப்படுகிறது


புதுச்சேரி,
புதுச்சேரி, சிக்கிம் மாநிலங்களில் முதற்கட்டமாக சரக்கு மற்றும் சேவை வரி இணையதளம் செவ்வாய்க்கிழமை (8.11.16) தொடங்கப்படுகிறது என ஜிஎஸ்டிஎன் தலைவர் (Goods And Service Tax Network) நவீன்குமார் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. இதையொட்டி இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) புதுச்சேரி பிரிவு சார்பில் ஜிஎஸ்டி இணையதளம் தொடர்பாக வணிகர்கள், தொழில்துறையினர் பங்கேற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிஐஐ தலைவர் ஸ்ரீகாந்த் சிவராமன் வரவேற்றார். புதுச்சேரி அரசு வணிகவரித்துறை ஆணையர் ஜி.ஸ்ரீனிவாஸ் கருத்துரை ஆற்றினார். ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பின் தலைவர் நவீன்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:
நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமுல்படுத்தப்படுகிறது. தற்போது வாட், உற்பத்தி வரி, சரக்கு வரி, சேவை வரி போன்றவை செலுத்தும் வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள் ஓரே வரிவிதிப்பின் கீழ் வரும் வகையல் ஜிஎஸ்டி அமுல்படுத்தப்படுகிறது.
இதற்காக அவர்களுக்கு நாடு முழுவதும் விழிப்புணர்வு கருத்தரங்கம், கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்த முதல்கட்டமாக வணிகவரித் துறையில் பதிவு பெற்றுள்ள அனைத்து வணிகர்களுக்கும் ஜிஎஸ்டிஎன் தளத்துக்கு மாறவேண்டும்.
இதற்காக இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள், தொழில்நிறுவனங்கள் தங்கள் முழு விவரங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த இணையதள சேவை முதல் கட்டமாக புதுச்சேரி, சிக்கம் மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. இரண்டாம் கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கோவா, டையூ, டாமன், தத்ரா நகர் ஹவேலி பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும். மூன்றாம் கட்டமாக பிற மாநிலங்களில் ஜிஎஸ்டிஎன் செயல்பாட்டுக்கு வரும்.
முதல் கட்டமாக வணிகர்கள் பதிவு செய்யப்படுவர். இதைத் தொடர்ந்து பல கட்டங்களாக அவர்களது விவரங்கள் உறுதி செய்யப்படும். மூன்றாவது கட்டத்தில் அனைத்து விவரங்களும் நிரந்தரமாக்கப்பட்டு விடும்.
இதில் தற்போது 12 மாநிலங்கள் இணையதள சேவைக்கு தயாராக உள்ளன. மேலும் 20 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்கள் இப்பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துள்ளன.
புதுச்சேரியில் மட்டும் 60 ஆயிரம் வணிகர்கள், தொழில்நிறுவனங்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இந்தியா முழுவதும் 88 சதவீதம் வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் மாற தயாராக உள்ளனர். மீதமுள்ள 12 சதவீதம் பேரையும் விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாட் வரி செலுத்துவோர் 65 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 3 லட்சம் பேரின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ளோர் பதிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் சேவை வரி செலுத்தும் 26 லட்சம் பேரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு மாற விரும்பும் வணிகர்கள், தொழில்நிறுவனங்கள் சுயமாக முன்வந்து விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றார் நவீன்குமார். சிஐஐ துணைத் தலைவர் ஆர்.டி.ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...