புதுச்சேரி : ஜல்லிகட்டை நடத்த வலியுறுத்தி 2000 கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகன பிரசார பயணத்தை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் பட்டதாரி மகேஸ்வரி திங்கள்கிழமை தொடங்கினார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி மகேஸ்வரி. மோட்டார் சைக்கிள் வீரராக நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை மீட்டு எடுக்கவும், பாரம்பரிய நாட்டு மாட்டினங்களின் எண்ணிக்கையை பெருக்கவும், காட்சிப்படுத்தாத வன விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் புல்லட் மூலம் 2000 கி.மீ தூரம் பிரசார பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி மகேஸ்வரி திங்கள்கிழமை காலை கடற்கரை சாலை காந்தி திடலில் பிரசார பயணத்தை துவக்கினார். புதுச்சேரியில் தொடங்கி கும்பகோணம், தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், சென்னை வழியாக மீண்டும் 5-ம் தேதி புதுச்சேரி வந்தடைகிறார்.
மொத்தம் 2000 கிமீ தொலைவு பயணம் சென்று ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என விழிப்புணர்வு பிரசாரம் செய்வேன். ஏற்கெனவே புல்லட்டில் பல மாநிலங்களுக்கு சென்று வந்துள்ளதால் அப்பயண அனுபவம் இதற்கு கைகொடுக்கும் என மகேஸ்வரி தெரிவித்தார்.