Enable Javscript for better performance
விவசாயப் பிரச்னைக்கு புதிய தீர்வு: தமிழக தொழில்நுட்ப வல்லுனர்கள் பிரதமருக்கு ஆலோசனை கடிதம்- Dinamani

சுடச்சுட

  

  விவசாயப் பிரச்னைக்கு புதிய தீர்வு: தமிழக தொழில்நுட்ப வல்லுனர்கள் பிரதமருக்கு ஆலோசனை கடிதம்

  By DIN  |   Published on : 24th February 2017 09:40 AM  |   அ+அ அ-   |    |  

  vivasayam

  சென்னை: தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழுவினர் சிலர்  15  ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி எடுத்து  ஒரு புது, இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, அதனை மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றுள்ளனர்.

  இதன் மூலம் விவசாயம் செய்வதில்  உள்ள  கடின  தன்மையை இலகுவாக்கி கொள்ள முடியும். மேலும் கிராம அளவில் செயல்படும் விவசாய  மேலாண்மை மையத்தில், திட்டமிடுதலில் தொடங்கி  விதை முதல்  விற்பனை வரையிலான சேவைகளை, குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன் பெற முடியும் என்று தமிழக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். 

  அதில் பா.ஜ.க தேசிய செயலாளரின் மூலமாக எங்களின் 15 ஆண்டுகால உழைப்பின் திட்டத்தை பிரதமர் அலுவலகத்திடம் சமர்ப்பித்தோம். அதிகாரிகள் மிகவும் பாராட்டியயோடு விரைவில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தும் என்று உறுதி கூறினர்.  சில நாட்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மிகப்பெரிய அளவில் அறிவிக்கப்பட்டது.

  டிஜிட்டல் இந்தியா கிராமப்புற மேம்பாட்டிற்காக, விவசாயிகள் முன்னேற்றத்திக்காக  என்ன செய்ய முடியும் என்பதற்கான நிரூபணம் உள்ள நிலையில் அதற்கான எவ்வித அறிவிப்பும் வராததால் ஏமாற்றம் அடைந்தோம். இந்நிலையில் உணவுப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கு தற்போதைக்கு விளைந்து கொண்டிருக்கும் பொருள்களின் தகவல் (live crop production data) இல்லாததுதான் என்று தாங்கள் கூறிய கருத்து வெளியானது.

  எங்கள் திட்டத்தின் அடிப்படை விஷயங்களில் ஒன்று அன்றன்று பயிரிடப்படும் தகவல்களை இணையத்தகவல்களாக பதிவது என்பது ஆகும். எனவே நாங்கள் சமர்ப்பித்த திட்டம் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்பதை அறிந்தோம்.  

  இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை  மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி, மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட டீம் இருக்கும்.

  விவவசாயிகள் இவர்களின் துணையோடு, வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடபட்டிருக்குது என்கிற விபரம்,  தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் என்ற     தவல்களைப்  பெறலாம்.

  விதை, உரம், பூச்சி கொல்லி போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி, தனது ஊரில், வேலை ஆட்கள் மட்டும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில் அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி மற்றும் முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை செய்துகொள்ள முடியும்.

  இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கை தரம் முன்னேறும். தேவையில்லாமல் நகர்புறத்துக்கு இடம் பெயர வேண்டியதில்லை. அன்றைய தினத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் நில பரப்பு, தட்ப வெட்பம் போன்ற புள்ளி விபரங்கள் உடனுக்குடன் இணையத்தகவல்களாக பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டின் உணவு தரம், பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு போன்ற மிக முக்கிய விசயங்களை சிறப்பாக நிர்வகிக்கலாம், பயிர் கடன் மற்றும் காபீட்டுல ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம்.

  பயிர்கடன்களை, காப்பீடுகளை விரிவாக்கம் செய்து  சிறு குறு விவசாயிகளோட வாழ்க்கையை பாதுகாக்கலாம். கிராம பொருளாதார மேம்பாட்டு மூலமா நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்கலாம். தரமான இடுபொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதில் தங்கள் பொருள்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

  மேலும் ஆந்திர மாநிலத்தில், தீவிர ஆய்விற்குப் பிறகு, கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்துலா என்னும் ஒன்றியத்தில் இருக்கும் 30 கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த  வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளில்  இத்திட்டத்தின் அனைத்து குறிக்கோள்களும் விவசாயிகளின் முழு ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது (2004-07).

  இத்திட்டத்தினை கடப்பா   மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தும் பொருட்டு (1000 கிராமங்கள்) மத்திய அரசின் சிறப்பு விவசாய திட்டத்திற்காக (RKVY) பரிந்துரை செய்யப்பட்டது. அந்த திட்டத்திற்கான மத்திய மாநில அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டுக்குழு இத்திட்டம் இந்திய விசாயத்தில் புது அணுகுமுறை ஏற்படுவதற்கு வழி வகுக்கும் என்ற பாராட்டோடு ஒப்புதல் அளித்தது (2008-09). துரதிர்ஷ்டவசமாக   ஆந்திர அரசாங்கத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இத்திட்டம் செயல்படுத்தப்படமுடியாமல் போனது .

  பருவ மழையில் ஏற்பட்டு வரும் அபாயகரமான மாற்றங்கள், விவசாய பொருட்களுக்கான விலை ஏற்ற இறக்கங்கள் போன்றவை விவசாயிகளின் பிரச்சனைகளை அதிகப்படுத்தி வருகிறது. உணவுப்பொருள்களின் தரம் மற்றும் விலை நுகர்வோர்களை மிகவும் பாத்தித்து வருகிறது.

  இவைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதினால் நாங்கள் மனம் தளராமல்இந்த திட்டத்தை எப்படியாவது அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்த முயன்று வருகிறோம். மேலும் இந்த கடிதத்தின் மூலம் இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்று பிரதமரிம் கோரிக்கை வைத்துள்ளனர். 

  - ராம. திருச்செல்வம்

  kattana sevai