

விழுப்புரம்: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உயிரிழந்த மாணவி பிரதீபாவின் தந்தை சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 6-இல் நடைபெற்றது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 13.26 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 16.49 சதவீதம் பேர் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் 12 லட்சத்து 69, 922 பேர் தேர்வை எழுதினர்.
அவர்களின் நீட் தேர்வு முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கள்கிழமை பிற்பகலிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வளத்தியை அடுத்த பெருவளூர் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரதீபா (18). கடந்த 2016-2017 ஆம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று, பொதுத் தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேரஆர்வமாக இருந்த அவர், முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எழுதினார்.
அதில், 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. எனினும், அவர், மீண்டும் நீட் தேர்வெழுத ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார்.
அதன்படி, நிகழாண்டும் நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் நேற்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், கடந்த ஆண்டைவிட மிகக் குறைவாக 39 மதிப்பெண் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்து மனமுடைந்த மாணவி, விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி பிரதீபாவின் தந்தை சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீர் தேர்வால் எனது மகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பிற்கு காரணமான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்களும், பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்ற பிரதீபா, குளறுபடியான நீட் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார் என்பது நம்பும்படியாகவா உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.