18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சில ஆவணங்களைத் தர வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கோரியிருந்தோம். அந்த ஆவணங்களைக் கொடுத்தால் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருந்தோம். ஆனால், நாங்கள் கேட்ட ஆவணங்களை பேரவைத் தலைவர் அளிக்கவில்லை.
இது போன்ற சூழ்நிலைகளில் பேரவைத் தலைவரின் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கதல்ல. பேரவைத் தலைவரின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, எங்களைத் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கோரி, கடந்த ஆண்டு சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017, செப்டம்பர் 18-ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பல மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்தது.
இந்நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.
அதே சமயம், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தனது மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14-ஆம் தேதி வழங்கினர்.
இரண்டு நீதிபதிகளும் இருவேறு மாறுபட்ட தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும், 3வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவதாகவும், 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்தார்.
இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக நீதிபதி எஸ்.விமலாவை நியமனம் செய்து, பதிவுத் துறைக்கு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் கடந்த ஜூன் 18-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ஜூன் 14-ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், ஜூலை 23-ஆம் தேதி முதல் மூன்றாவது நீதிபதி எம்.சத்யநாராயணன் விசாரித்தார்.
மூன்றாவது நீதிபதி முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆரியமா சுந்தரம், முதல்வர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆரியமா சந்தரம் வாதங்கள் முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24-ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நிச்சயமாக எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று தங்க. தமிழ்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் ஐபோன் 18: விற்பனை எப்போது?

மணமகளே வா தொடரின் படப்பிடிப்பு நிறைவு! வைரலாகும் புகைப்படங்கள்!

அதிகாரம் யாருக்கு? தேர்தல் கருத்துக் கணிப்பு மீது இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன்?

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


