கிராம அஞ்சலகங்களில் இணைய வழி சேவையை மேம்படுத்தும் தபால் துறை !
தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் செயல்படும் கிளை அஞ்சலகங்களில் கையடக்க மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டு, இணையவழி தபால் மற்றும் வங்கி சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் செயல்படும் கிளை அஞ்சலகங்களில் கையடக்க மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டு, இணையவழி தபால் மற்றும் வங்கி சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நாட்டில் அஞ்சல் துறை ஆரோ திட்டத்தின் கீழ் கணினி தொழில் நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புற அஞ்சலகங்கள் மேம்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், 1.54 லட்சம் கிளைகளைக் கொண்டு 80 சதவீத சேவையை வழங்கி வரும் கிராமப்புற அஞ்சல் நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அஞ்சலகங்களில் இணைய வழி சேவை இல்லாததால், பழைய முறைப்படி பேப்பரில் எழுதி, கட்டுக்கட்டி அனுப்பும் நிலை இருந்து வருகிறது. தற்போது, கிராமிய தகவல் மேம்பாட்டு தொழில் நுட்பத் திட்டத்தின் (ஆர்.ஐ.சி.டி) ஓர் அங்கமாக, தர்பான் (டிஜிட்டல் அட்வான்ஸ்டு ஆப் ரூரல் போஸ்ட் ஆபீஸ்) திட்டத்தின் கீழ் அஞ்சலகங்கள் இணைய வழியில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் அனைத்து கிராமப் புற அஞ்சலகங்களுக்கும் புதிய கையடக்க மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய புதுவை கோட்டத்தில் உள்ள 250 கிராமிய அஞ்சலகங்களில் 50 தபால் நிலையங்களில் மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் வட்டம் காங்கேயனூர், பள்ளியந்தூர், அதனூர், திருவாமாத்தூர், அரியலூர் திருக்கை உள்ளிட்ட கிராம அஞ்சலகங்களில், சில தினங்களுக்கு முன்பு இந்த மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளர் ராஜேந்திரன், தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கூறியதாவது:
கிராமப்புற அஞ்சலகங்களுக்கு இந்த மின்னணு சாதனங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அஞ்சலக சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு, காலமுறை வைப்பு, அஞ்சல் காப்பீடு திட்டங்களை தொடங்குதல், பராமரித்தல், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், விரைவுத் தபால், பதிவுத் தபால், மணியார்டர் அனுப்புதல் போன்றவை இந்த சாதனங்கள் மூலம் பதியப்பட்டு, உடனுக்குடன் ரசீது வழங்கப்படும். வாடிக்கையாளர்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கு எண்ணை இந்த சாதனத்தில் அழுத்தினால் கணக்கு நிலவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். அந்த எண்ணை அழுத்தி பணப் பரிமாற்றம், தபால் சேவை, காப்பீடு பிரீமியம் செலுத்துதல் போன்றவற்றையும் உடனுக்குடன் இணைய வழியில் மேற்கொள்ளலாம். மேலும், கணக்குகளை ஒருங்கிணைப்பதுடன், விவரங்கள் அனைத்தும் வாடிக்கையாளரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாகவும் வந்து சேர்ந்து விடும். மேலும், சிறப்புத் திட்டங்கள், காப்பீடு பிரீமியம் போன்றவற்றையும் இணைய வழியில் அறிந்து கொள்ள முடியும்.
மக்கள் அனுப்பும் விரைவுத் தபால்கள், பணப்பரிமாற்றம் உரியவரிடம் தபால் ஊழியர் சேர்த்தவுடன் அதற்கான தகவலும் கிடைக்கும். தற்போது, பிஎஸ்என்எல் கட்டணமும் இதன் மூலம் பெறப்படுகிறது.
எதிர்காலத்தில் ஏடிஎம் அட்டைகள் மூலமும் பணப் பரிமாற்றம் செய்தல், மின் கட்டணம், செல்லிடப்பேசி கட்டணங்கள், எளிதான வங்கி சேவைகளையும் பெற முடியும். வெளிநாட்டிலிருந்து பண பரிமாற்றம் செய்யும் வசதிகளையும் பெறலாம்.
கிராமப்புற அஞ்சலகங்களில் பழைய நடைமுறை தவிர்க்கப்பட்டுள்ளதால் பணி சுமை குறைகிறது. இணைய வசதி, கணிணி வசதியில்லாத கிளை அஞ்சலகங்கள், இந்த சாதனம் மூலம் இணைய வழியில் இணைக்கப்பட்டு விரைவான சேவையை வழங்க முடியும். இந்த சாதனம் பேட்டரியால் இயங்குவதால், மின்சாரம் தடைபடும் கிராமங்களிலும் தபால் துறை சேவை தடையின்றி நடைபெறும். தமிழகத்தில் கையடக்க மின்னணு சாதனம் வழங்கும் பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வங்கி சேவைகளும் இதன் மூலம் இணைவதால், கிராமத்திலிருந்தே மக்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...