இன்று முதல் இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் 'லோன் மேளா': மத்திய அரசு

சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் முதல் கடைநிலை வாடிக்கையாளர்கள் வரை ஒரே இடத்தில் அனைத்து வங்கி
இன்று முதல் இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் 'லோன் மேளா': மத்திய அரசு
Published on
Updated on
2 min read

புதுதில்லி: பண்டிகை காலத்தையொட்டி இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகளில் உடனடி கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் முதல் கடைநிலை வாடிக்கையாளர்கள் வரை ஒரே இடத்தில் அனைத்து வங்கி சேவைகளும் வழங்கப்படும் ‘வாடிக்கையாளர்களை தேடி வங்கி சேவை’ என்ற வழக்கமான வங்கிகளின் சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒரு திட்டமான 'லோன் மேளா' முதல் கட்டமாக இன்று வியாழக்கிழமை (அக்.3) முதல் நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் நான்கு நாட்கள் திருவிழா காலத்தில் நடைபெறுகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பண்டிகை காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

சில நாட்கள் முன்பு நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் ஆண்டு செயல்பாடு பற்றிய ஆய்வு கூட்டத்தில், அடையாளம் காணப்பட்ட 400 மாவட்டங்களில் கடன் வழங்குவதில் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் தனியார் வங்கிகளும் இந்த திட்டத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தன.

இதையடுத்து வரும் வாரம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை (அக். 3)  முதல் 4 நாட்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரே‌‌ஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன.

இதில் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் ஆட்டோ வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன. வணிகப் பிரிவில் உள்ள கடன்களை பெற அணுகுவதற்கான ஒரு இடமாக இருக்கும்" என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

250 மாவட்டங்களில் பாரத ஸ்டேட் வங்கி 48 மாவட்டங்களில் முன்னோடி வங்கியாக உள்ளது. 17 மாவட்டங்களில் பேங்க் ஆப் பரோடா முன்னோடி வங்கியாக இருக்கிறது.

இந்த 'லோன் மேளா' திட்டம் பண்டிகை காலங்களில் வர்த்தகர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், அதே சமயம் வாடிக்கையாளர்கள் கைகளிலும் பணம் தயாராக இருக்கும். கடன் வழங்குவதில் அனைத்து நிதிதொடர்பான எச்சரிக்கை விதிகளும், விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளும் வங்கிகளால் பின்பற்றப்படும் என்று பொதுத்துறை வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்தந்த மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உள்ளூர் வர்த்தக சங்கங்கள், வணிக நிறுவனங்கள், வர்த்தகசபைகள் மூலமும் வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்படும்.

இரண்டாவது கட்டமாக இந்த உடனடி கடன் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகைக்கும் முன்பாக 150 மாவட்டங்களில் வருகிற 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com