பொதுமுடக்கம்: போக்குவரத்தின்றி முடங்கிய திருச்சி

கரோனா தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக அரசு தொடர்ந்துள்ள பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் முழு முடக்கத்தால் திருச்சி போக்குவரத்தின்றி முடங்கியது.
போக்குவரத்தின்றி முடங்கிய திருச்சி
போக்குவரத்தின்றி முடங்கிய திருச்சி
Published on
Updated on
2 min read

திருச்சி: கரோனா தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக அரசு தொடர்ந்துள்ள பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் முழு முடக்கத்தால் திருச்சி போக்குவரத்தின்றி முடங்கியது.

தமிழகத்தில், கரோனா தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் தமிழக அரசு  பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது. என்றாலும், பொருளாதாரம், உற்பத்தி, மக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு பொதுமுடக்க விதிமுறைகளில் அரசு சற்று தளர்வு செய்துள்ளதால், இயல்பு நிலை ஓரளவு திரும்பியுள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. எனவே பொதுமக்களும் பணி நிமித்தமாகவும், பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் செல்வது, திருமணம், இறப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்று வருகின்றனர்.

6 ஆவது ஞாயிற்றுக்கிழமை:  கரோனா தொற்று பரவுதல் எதிர்பார்த்ததை விட வேகமாக பரவி வருகின்றது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதத்தில்  5, 12, 19, 26 தேதிகளில் வந்த ஞாயிற்றுக்கிழமைகளைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் 2, 9, 16, 13, 30 தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தின் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை, கடந்த 5 ஞாயிற்றுக்கிழமைகளைப்போலவே போக்குவரத்து இன்றி காணப்பட்டது.

வெறிச்சோடிக் காணப்பட்ட சாலைகள்: இதனையடுத்து திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான, கோட்டை, சத்திரம், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், தில்லைநகர், உறையூர், தென்னூர், கே. கே. நகர், விமான நிலையம் என மாநகர பகுதிகளும், புறநகரப் பகுதிகளும்  என அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் பொதுமக்கள், வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. 

உணவகங்கள், சாலையோர உணவக கடைகள், துரித உணவகங்கள், தேநீர் நிலையங்கள், பேக்கரிகள் என அனைத்து கடைகள், நிறுவனங்கள் பூட்டப்பட்டிருந்தன.

விளையாட்டுப் பயிற்சிகளும் இல்லை : சாலைகளில் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டும் பயிற்சிகள், மற்றும் உடற்பயிற்சி செய்வோரின் நடமாட்டம் காலை நேரங்களில் ஓரளவு காணப்படும். ஆனால் முழு பொதுமுடக்கம் காரணமாக, ஞாயிறு காலை முதலே சாலைகளில் ஒரு சிலர் தவிர பெரும்பாலானோர் வரவில்லை. மேலும், சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கான பயிற்சிகள் மாவட்ட அரசு விளையாட்டு அரங்கங்களில் நடைபெறும் என அரசு அண்மையில் அறிவித்திருந்தது.  என்றாலும் முழு பொதுமுடக்கம் காரணமாக திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு அரங்கங்களும் மூடப்பட்டதால், அவற்றில் தனி மற்றும் குழு பயிற்சிகள் மேற்கொள்வோரும்  பங்கேற்கச் செல்லவில்லை. சுமார் 4000 காவலர்கள் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com