அரசு அலுவலக வளாகங்களில் பறவைகளுக்காகச் செயற்கைக் கூடுகள்!

அரசு அலுவலக வளாகங்களில் பறவைகளுக்காகச் செயற்கைக் கூடுகள்!

தஞ்சாவூரிலுள்ள அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் முதன்மைச் சாலைகளில் பறவைகளுக்காகச் செயற்கைக் கூடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை.
Published on


தஞ்சாவூர்: தஞ்சாவூரிலுள்ள அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் முதன்மைச் சாலைகளில் பறவைகளுக்காகச் செயற்கைக் கூடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை.

சுற்றுச்சூழலில் பல்லுயிர் பெருக்கத்துக்குச் சிறு பறவைகள் மிகவும் அவசியம். மனிதனுக்குத் தீங்காக இருக்கக்கூடிய கம்பளி பூச்சி போன்ற சிறு பூச்சிகள், கரையான்கள் உள்ளிட்டவற்றை சிறு பறவைகள் சாப்பிடக்கூடியவை. மேலும், பயிர்களில் தீமை விளைவிக்கக்கூடிய பூச்சிகளையும் உண்ணக்கூடியவை என்பதால், உணவு தானிய விரயத்தையும் தடுக்க முடியும். ஆனால், சுற்றுச்சூழல் மாற்றம், உணவு, தண்ணீர் பிரச்னை உள்பட பல்வேறு காரணங்களால் பறவையினம் குறைந்து வருகிறது.

எனவே, பறவைகளைக் காக்கும் விதமாகவும், அவற்றுக்கு வாழ்விடம் ஏற்படுத்தும் வகையிலும் தஞ்சாவூரில் செயற்கைக் கூடுகள் அமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினர்.

இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் ஆர். சதீஷ்குமார் தெரிவித்தது:
இந்த அறக்கட்டளை சார்பில் சில ஆண்டுகளாக உலக சிட்டுக்குருவி நாளான மார்ச் 20-ஆம் தேதி தொடங்கி, உலகச் சுற்றுச்சூழல் நாளான ஜூன் 5-ஆம் தேதி வரை செயற்கைக் கூடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

நிகழாண்டு கரோனா காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்ததால் இப்பணி தள்ளிப்போனது. எனவே, உலகச் சுற்றுச்சூழல் நாளான வெள்ளிக்கிழமை இப்பணி தொடங்கப்பட்டது.

முன்பு ஆண்டுதோறும் 200 கூடுகள் வைத்து வந்தோம். தற்போது நான்காம் ஆண்டில் 500 கூடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில், முதல் கட்டமாக அரசு அலுவலக வளாகத்தில் செயற்கைக் கூடுகள் அமைத்து வருகிறோம். இதுவரை பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம், புதிய ஆட்சியரக வளாகத்தில் தலா 10 கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

பெரும்பாலும், மரங்களில் இக்கூடுகள் பொருத்தப்படுகின்றன. மற்ற அரசு அலுவலக வளாகங்களில் வைக்கப்பட்ட பிறகு, ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள முதன்மைச் சாலைகளில் அமைக்கவுள்ளோம்.

தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் காணப்படும் பறவைகளில் சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கொண்டைக்குருவி போன்றவை அதிகமாக இருக்கின்றன. இக்குருவிகள் வாழ்வதற்கேற்ப கூடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் செய்து வைக்கலாம். 

ஒரு கூடு செய்வதற்கு ரூ. 200 செலவாகிறது. மரங்களை வாங்கி வந்து நாங்களை தயார் செய்து வருகிறோம். நிதியுதவி கிடைத்தால் இன்னும் முழுவீச்சில் செய்யலாம் என்றார் சதீஷ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com