நாளை முதல்வர் வருகை: தயாராகும் திருச்சி!

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை தயார்படுத்தி வருகிறது.
நாளை முதல்வர் வருகை: தயாராகும் திருச்சி!


திருச்சி: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை தயார்படுத்தி வருகிறது.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, வெள்ளிக்கிழமை காலை திருச்சிக்கு கார் மூலம் வருகை தரவுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கரோனா தடுப்பு களப்பணிகள், வளர்ச்சி திட்டப் பணிகள், நீர் மேலாண்மைத் திட்ட பணிகள், வேளாண்மைத் துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். 

பின்னர், முக்கொம்புக்கு நேரில் சென்று அங்கு ரூ.387 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை பார்வையிடவுள்ளார். முக்கொம்பு மேலணையில் வரப்பெற்ற வெள்ளப்பெருக்கில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 9 மதகுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. உடனடியாக தாற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தி காப்பணை கட்டப்பட்டது. இருப்பினும், உடைந்த கதவணைக்கு மாற்றாக அதே பகுதியில் 100 மீடர் தொலைவில் புதிய கதவணை கட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். முக்கொம்புக்கு நேரில் வந்து உடைந்த அணையை பார்வையிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. 2021 மார்ச் மாதம் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை திருச்சி வருகை தரும் முதல்வர், முக்கொம்புக்கு சென்று கதவணை கட்டும் பணியையும் ஆய்வு செய்யவுள்ளார். இதற்காக, திருச்சி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

முதல்வர்  நிகழ்வில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள், காவல்துறை, ஊடகத்துறையினருக்கு கரோனா பரிசதோனை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com