திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று பல அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.

அதில் திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் கூடுதலாக கிடங்குகள் கட்டுமானம் செய்வது விவசாயிகளுக்கு பேருதவியாக அமையும்.

விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

மேலும், அறுவடைக்கு பின் தானியம் மற்றும் பயறு வகைகளை சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆகமொத்தம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூறியவாறு 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com