தஞ்சாவூர் மேயர் பதவி: திமுகவுக்குள் கடும் போட்டி

திமுக கோட்டையாக இருந்த தஞ்சாவூர் தொகுதியை 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. 
தஞ்சாவூர் மாநகராட்சி
தஞ்சாவூர் மாநகராட்சி
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர்: திமுக கோட்டையாக இருந்த தஞ்சாவூர் தொகுதியை 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. 

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் நகராட்சி (இப்போது மாநகராட்சி), தஞ்சாவூர் மக்களவை தொகுதி எனப் படிப்படியாக திமுக இழந்தது. இவற்றை எல்லாம் அதிமுக கைப்பற்றியது. 

இழந்த சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளை ஒரே நேரத்தில் 2019 ஆம் ஆண்டில் திமுக மீண்டும் கைப்பற்றியது. அடுத்து 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் தஞ்சாவூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுத் தக்க வைத்துள்ளது.

தஞ்சாவூர் நகராட்சியில் 1996-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் முதல் முதலாக அதிமுக வெற்றி பெற்றது. 156 ஆண்டுகள் பழைமையான இந்த நகராட்சி 2014 ஆம் ஆண்டில் மாநகராட்சி அந்தஸ்து பெற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது. இந்த முதல் தேர்தலில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக கூட்டணி 40 வார்டுகளை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் மாநகராட்சியையும் பிடித்து, திமுக கோட்டையாக மாறியிருக்கிறது தஞ்சாவூர்.

இந்த பரபரப்பு முடிவுக்கு வருவதற்குள் அடுத்த தஞ்சாவூர் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இதனிடையே, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பிலிருந்தே மேயர் பதவியைப் பெறுவதற்காகக் காய் நகர்த்தி வந்தனர். இக்கனவில் ஆழ்ந்திருந்தவர்களும் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று, அதை நனவாக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


அஞ்சுகம் பூபதி:


இவர் 51-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அஞ்சுகம் பூபதி. ஏற்கெனவே 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டார். அப்போது, இவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற தஞ்சாவூர் தொகுதி தேர்தலில் அஞ்சுகம் பூபதி வெற்றி வாய்ப்பை இழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்த இவருக்கு அப்போதிலிருந்தே அனுதாபம் இருந்து வருகிறது. எனவே, இம்முறை மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே நிலவுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு இவரும் மேயர் பதவியைப் பெற காய் நகர்த்தி வருகிறார். 

மறைந்த முதல்வர் கருணாநிதியின் குடும்பத்துக்கு அஞ்சுகம் பூபதியின் தந்தை காலம் சென்ற பூபதி மிகவும் நெருக்கமானவர். மேலும், மகப்பேறு மற்றும் பெண் பிணியியல் மருத்துவரான அஞ்சுகம் பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு மருத்துவம் பார்த்து குணப்படுத்தினார். அக்குடும்பத்தின் ஆதரவால் 2016-ஆம் ஆண்டில் இவருக்கு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. இந்த ஆதரவு தொடர்வதால், மேயர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அஞ்சுகம் பூபதி உள்ளார்.

சண். ராமநாதன்:

இந்த தீவிர முயற்சியில் திமுக இளைஞரணியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் சண். ராமநாதனும் உள்ளார். நகர்மன்ற, மாமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட இரு முறை முயன்றார். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், இப்போது மேயர் பதவியைப் பெறும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கியுள்ளார். கருணாநிதியின் சமூகத்தைச் சார்ந்த இவருக்கு திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். இதனால், இந்த முறை இவருக்கு மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

சந்திரசேகர மேத்தா:

மாநகரிலுள்ள திமுக மூத்த பிரமுகர்களில் ஒருவரான ச. சந்திரசேகர மேத்தா நகர்மன்ற, மாமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். மாநகரில் உணவகம் நடத்தி வரும் இவரும் இம்முறையும் வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சியின் 17-ஆவது வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் மேயர் பதவியைப் பெறுவதற்காக திமுக நிர்வாகிகள் சிலரை அணுகி தீவிரமாக முயன்று வருகிறார். உள்ளூரில் உள்ள திமுக நிர்வாகிகளில் சிலரும் இவரை மேயர் பதவிக்காக மேலிடத்துக்குப் பரிந்துரைத்து வருகின்றனர்.

இவர்களைப் போல, 34-ஆவது வார்டில் வெற்றி பெற்ற க. இளங்கோவன், 40-ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக மாநகரத் துணைச் செயலர் க. நீலகண்டன் உள்ளிட்டோரும்  மேயர் அல்லது துணை மேயர் பதவியைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களெல்லாம் முயற்சி செய்தாலும் கூட, தஞ்சாவூர் மேயர், துணை மேயர் யார் என்பதைக் கட்சி மேலிடம்தான் முடிவு செய்து அறிவிக்கும். ஆனால், மேலிடம் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்கிறது திமுக வட்டாரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com