உத்தரகண்ட்: மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா பாஜக?

பிப். 14-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசார அனல் பறக்கிறது.
உத்தரகண்ட்: மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா பாஜக?

பிப். 14-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசார அனல் பறக்கிறது. இந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா? ஏற்கெனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீண்டும் வெல்லுமா? புதிதாகக் களம் காணும் ஆம் ஆத்மி சாதனை படைக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 
இம்மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் பிப்.14-இல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியும்.


முந்தைய தேர்தல்கள் முன்னோட்டம்: 2000 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது அமைந்த தற்காலிகப் பேரவையில், பாஜகவின் நித்யானந்த் சுவாமியும் அவரைத் தொடர்ந்து பகத் சிங் கோஷியாரியும் முதல்வராக இருந்தனர்.
2002 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சியே அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். 
கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத்தின் முதலாவது பேரவைத் தேர்தலில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. மாநில முதல்வராக என்.டி.திவாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் பாஜக-7, உத்தரகண்ட் கிராந்தி தளம் (யுகேடி)- 4, தேசியவாத காங்கிரஸ்-1, சுயேச்சை-3 தொகுதிகளைக் கைப்பற்றின. 
2007 ஆம் ஆண்டு தேர்தலின்போது, மாநிலத்தில் பாஜக வலுவான கட்சியாக உருவெடுத்தது. அந்த ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-35 தொகுதிகளிலும், காங்கிரஸ்- 21, பகுஜன் சமாஜ் கட்சி-8, யுகேடி-3, சுயே-3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜகவின் முதல்வரான பி.சி.கந்தூரி 2009 வரை முதல்வராக இருந்தார். அடுத்து, 2009- 2011இல் ரமேஷ் பொக்ரியாலும், 2011- 2012இல் மீண்டும் பி.சி.கந்தூரியும் முதல்வராகப் பொறுப்பு வகித்தனர். 


கட்சியில் ஏற்பட்ட உட்பூசல், வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற காரணங்களால் 2012-இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தது. காங்கிரஸ்- 32, பாஜக- 31, பகுஜன் சமாஜ் கட்சி- 3, யுகேடி (பி)-1, சுயேச்சைகள்-3 தொகுதிகளில் வென்றனர். காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ், யுகேடி (பி), சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது; விஜய் பகுகுணா முதல்வரானார். 
2017 தேர்தலில் மீண்டும் எழுச்சி பெற்ற பாஜக 57 தொகுதிகளில் வென்று, உத்தரகண்டில் ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ்-11, சுயேச்சைகள்-2 தொகுதிகளில் வென்றனர். முதல்வரான திரிவேந்திர சிங் ராவத் 2021 வரை பதவி வகித்தார். அடுத்து, 2021-இல் தீரத் சிங் ராவத் (116 நாள்கள்), புஷ்கர் சிங் தாமி (தற்போதுவரை) ஆகியோர் முதல்வராகப் பொறுப்பு வகித்தனர். 
2022-இல் கூட்டணி நிலவரம்: பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் அங்குள்ள 70 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை களம் இறக்குகின்றன. இதுதவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. 
மேலும் பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரகண்ட் கிராந்தி தளம், சமாஜவாதி கட்சி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆகியவையும் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்தத் தேர்தலில் 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளன. 
அதிருப்தி வேட்பாளர்களால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் ளில் சில தொகுதிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்: இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளைச் சேகரித்து வருகின்றன. 
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் "லோக் ஆயுக்த'வை அமைப்போம் என்று அறிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், லேப்-டாப், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை, விவசாயிகளுக்கு பயிர்க்கடன், பண்ணைக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை ஆளும் பாஜகவினர் உறுதிமொழியாக அளித்துள்ளனர். கடந்த தேர்தலின்போது அறிவித்த 85 % தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். 
இதற்கு போட்டியாக, மாநிலத்திலுள்ள நூற்றுக்கணக்கான மலைக் கிராமங்களில் இருந்து வேலைவாய்ப்புத் தேடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. மேலும் மலைப்பகுதிகளில் போதுமான வளர்ச்சித் திட்டப் பணிகள் ஏற்படுத்தப்படும். சிறுபான்மையின, பட்டியல் இனத்தவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி, சுகாதாரம், விவசாய வளர்ச்சிப் பணிகள் மேம்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியை பொருத்த வரை, தலைநகர் தில்லியை முன்மாதிரியாகக் கொண்டு உத்தரகண்ட் மாநிலத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுகிறது. ஆட்சிக்கு வந்தால் தேஹ்ரி அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும். வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அளித்துள்ளது.


கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன?: உத்தரகண்ட் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளின் பட்டியலில் வேலைவாய்ப்பின்மை (47.20 %) என்றும், பண வீக்கம் (26.30 %), மத பிரச்னைகள் (10.60 %) ஊழல் பிரச்னைகள் (10.84%) உள்ளதாகவும் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. 
தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை, இதுவரையிலும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது (காண்க: பட்டியல்). இருப்பினும், கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு பலனளிக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


முதல்வர் வேட்பாளர்கள்
பாஜகவும் காங்கிரஸும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக கர்னல் அஜய் கோத்தியால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் தற்போதைய முதல்வரான புஷ்கர் சிங் தாமி மீண்டும் உத்தரகண்டின் முதல்வராக 42.34% பேர் கருத்துக் கணிப்பில் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். 
காங்கிரஸின் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு 23.89% பேரும், ஆம் ஆத்மியின் கர்னல் அஜய் கோத்தியாலுக்கு 14.55% பேரும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com